பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

சுந்தர சண்முகனார்


இரண்டிற்கும் இடையே இல்லாத ஓர் எழுத்து புதிதாய்த் தோன்றல், இருக்கும் ஓர் எழுத்து மற்றோரெழுத்தாகத் திரிதல், இருக்கும் ஓர் எழுத்து கெட்டு நீங்கல் ஆகிய தோன்றல்-திரிதல் கெடுதல் என்னும் விகாரங்கள் பற்றிக் கூறுவன.

இடைநிலை மயக்கம் இன்னதன்று. விகாரமானதோ அல்லது இயற்கையாக உள்ளதோ - ஆங்கு எவ்வெவ்வெழுத்துகள் இணையக் கூடியலை என்ற முடிவை ஓரளவு கூறுவது.

எனவே, இருசொற் புணர்ச்சிநிலை வேறு - இடைநிலை மெய்ம்மயக்கம் வேறு என்ற உண்மையை நச்சர் உள்ளத்தில் எண்ணியிருந்தால் மற்றவரோடு மாறுபடார்; இவ்வளவு குழப்பத்திற்கு இடம் இருந்திராது.

5. எடுத்துக்காட்டுகள்

மெய்ம்மயக்கம் பற்றிச் சுருக்கமாக, எடுத்துக்காட்டுகளுடன் ஒரு செய்தி கூறி முடித்துக் கொள்ளலாம்:

மெய்ம்மயக்கத்தில் வேற்றுநிலை மயக்கம், உடனிலை மயக்கம் என இருவகைகள் கூறப்பட்டுள்ளன. மங்கல், அஞ்சல், நட்பு, பண்பு, ஓய்வு, ஆர்வம், செல்வம், சூழ்வு, தெள்கு, கற்பனை, தென்றல் - போன்றவற்றின் இடையில் உள்ள மெய்கள், பக்கத்தில் வேறு மெய்களோடு மயங்கியுள்ளன. இது வேற்றுநிலை மயக்கம்.

பக்கம், எங்ஙனம், பச்சை, மஞ்ஞை, பட்டம், பண்ணல், வெந்நீர், கத்தி, கப்பல், பொம்மை. வெய்யர். வெல்லம், தெவ்வர், பள்ளம், கொற்றவை, தென்னை - போன்றவற்றின் இடையில் உள்ள மெய்கள் தம் மெய்களுடனேயே இயைந்துள்ளன. இது உடனிலை மயக்கமாகும். ஒற்றளபெடையில் எந்த மெய்யும் இரண்டாக இருக்கும் என்பது அறிந்த செய்தியே.