பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

163


எல்லா நூற்பாக்கட்கும் உரிய எடுத்துக்காட்டுகளைத் தொல்காப்பிய உரையிலும், நன்னூல் உரையிலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இங்கே நேரமும் உடல் நலமும் போதவில்லை.

6. புதிய இலக்கண ஆக்கம்

இக்கட்டுரையில் இதுகாறும் அறிமுகப்படுத்தியுள்ள முதனிலை, இடைநிலை, இறுதிநிலை என்பவற்றின் அடிப்படையில் புதிய இலக்கண ஆக்கம் என்னும் முயற்சிக்கு உதவக்கூடிய கூறு என்னவென்று காண்போம்:

தெனாலிராமன் கறுப்பு நாயை வெள்ளை நாயாக்கச் செய்த முயற்சிபோல, பழைய இலக்கணத்திற்கு மாற்றாகப் புதிய இலக்கணம் படைக்கும் முயற்சியின் பேரால் ஒன்று கிடக்க ஒன்று செய்துவிடுவோமோ என்ற அச்சத்துடனேயே இதைத் தெரிவிக்கிறேன்.

6.1 மாற்று வடிவங்கள்

ஸ, ஷ. ஜ, ஹ,க்ஷ என்ற கிரந்த எழுத்துகட்கும் fa என்னும் உரோமன் எழுத்துக்கும் ஈடான ஒலிப்புடைய எழுத்துகள் தமிழில் இல்லை. சில இடங்களில் ஸ என்பதற்கு ‘ய்ச’, ஷ வுக்கு ‘ழ்ச’, ஜ வுக்கு ‘ஞ்ச’ (பெருஞ்சோதி) ஹவுக்கு ‘ஃஅ’, க்ஷ வுக்கு ‘ட்ச’, fa வுக்கு ‘ஃப’ என்பனவற்றை மாற்றாகப் போடலாம் எனினும், எல்லா இடங்கட்கும் இது ஒத்து வராது. இருப்பினும், இந்தக் கிரந்த - ரோமன் எழுத்துகளைத் தமிழில் ஏற்றுக்கொள்ளத் தயங்கினால், ஸ்டாலின் - ரூஸ்வெல்ட் - புஷ் முதலிய பிறநாட்டார் பெயர்களையோ அல்லது சில பிறமொழி வழங்கும் இடங்களையோ தமிழில் சரியாகக் குறிப்பிடமுடியாது.

கம்பர் லக்ஷ்மணனை இலக்குவன் எனவும் விபீஷணனை வீடணன் எனவும் குறிப்பிட்டிருப்பதுபோல, இப்பெயர்களை