பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

173



இக்கால நடைமுறை இலக்கியத்தில் அளபெடை கையாளப்படவில்லை. மேலே கூறிய உயிர் அளபெடைக்கே இக்காலத்தில் இடம் இல்லையெனில், இலங்ங்கு - எங்ங்கு என்பன போன்ற ஒற்றளபெடைக்கு இக்காலத்தில் சிறிதும் இடமில்லை. ஆனால், ‘அம்பிகாபதி காதல் காப்பியம்’ என்னும் எனது நூலில் நான் அளபெடைகளை ஓரளவு கையாண்டுள்ளேன்.

தொல்காப்பியரும் நன்னூலாரும், செய்யுளில் இசை (ஓசை) கெடுவதால் அவ்விடத்தை நிரப்ப மற்றோரெழுத்தைப் போட்டு அளபெடுக்கச் செய்யவேண்டும் எனக் கூறியுள்ளனர். இது தவறு பொருள் பொதிவு கருதியே தொடக்கக் காலத்தில் அளபெடை எழுந்தது. நாளடைவில் அதை இடம் நிரம்பப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். அளபெடை பொருள் பெறுமானம் உடையது.

கற்போர்க்குச் சுமையைக் குறைக்க வேண்டின், நன்னூல் பாடத்திட்டத்திலிருந்து அளபெடையை விலக்கிவிடலாம். இதே நோக்கத்திற்காக, நன்னூலின் தொடக்கத்தில் உள்ள பாயிரப் பகுதியையும் விலக்கிவிடலாம். வேண்டுவோர் பிற்காலத்தில் படித்துக் கொள்ளலாம்.

உறுப்பிலக்கணம்

நன்னூல் பதவியலில் கூறப்பட்டுள்ள, முதல் நிலை (பகுதி), இறுதி நிலை (விகுதி), இடை நிலை, சாரியை, சந்தி (இணைப்பு), விகாரம் (வேறுபாடு) என்னும் அறுவகை உறுப்பு இலக்கணம் கற்கப்படவேண்டும். இந்த உறுப்பிலக்கணம் கற்பதனால் விளையும் பயன்கள் இரண்டு. ஒன்று: சொல்லாராய்ச்சி செய்ய இஃது உதவும்; இரண்டு: புதிய சொல்லாக்கம் செய்யவும் உதவும்.