பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

181


ஆம்பல் என்பதுதான் சேதாம்பல் என்றாயிற்று - பசுமை + தார் என்பதே பைந்தார் என்றாயிற்று - என்று கூறியுள்ளார். இச்செய்தி ‘ஈறு போதல்’ (136) என்னும் நூற்பாவால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால் + ஒடிந்தது = காலொடிந்தது என்பதும் கல் + உடைந்தது = கல்லுடைந்தது என்பதும் இயற்கையான மக்கள் வழக்காற்றுப் புணர்ச்சி விதியாகும். ஆனால், இதுபோல, செம்மை + ஆம்பல் என்பதைச் செம்மை ஆம்பல் - செம்மை ஆம்பல் எனப் பதினாயிரம் முறை கூறினும் சேதாம்பல் என்பது உருவாகாது. பசுமை + தார் என்பதைப் பசுமைத்தார் - பசுமைத்தார் என நூறாயிரம் முறை கூறினும் பைந்தார் என்பது உருவாகாது. இவற்றின் உண்மையான புணர்ச்சி விதி வருமாறு:-

செம்மை + ஆம்பல் என்பது சேதாம்பல் என்றாக வில்லை; சேது + ஆம்பல் என்பதே சேதாம்பல் என்றாயிற்று. சேது என்னும் சொல்லுக்கும் செம்மை (சிவப்பு) என்னும் பொருள் உண்டு. ‘சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச்சேதா’ என்னும் நற்றிணைப் (359) பாடல் பகுதி காண்க. இதிலுள்ள சேதா’ என்பதைச் சேது + ஆ எனப் பிரித்துச் சிவப்புப் பசு எனப்பொருள் கொள்ளல் வேண்டும்.

அடுத்து- பசுமை + தார் என்பது பைந்தார் என்றாகவில்லை. பை + தார் என்பதே பைந்தார் என்றாயிற்று. ‘பை’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்கே பசுமை என்னும் பொருள் உண்டு என்பதை, ‘பை தீர் பாணரொடு, (மலைபடுகடாம்-40), ‘நும் பை-தீர் கடும்பொடு’ (பெரும் பாணாற்றுப்படை-105) முதலிய இலக்கிய வழக்குகளால் அறியலாம். ‘பை தீர் பாணர்’ என்பதற்கு, பசுமை-வளமை தீர்ந்த ஏழைப் பாணர் என்பது பொருளாம். எனவே