பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

189



இந்த விதி பெரும்பாலும் பொருந்தும். ‘மலை கிழ வோனே’ என்பதுபோல் எங்கோ ஒருசில விதிவிலக்கு இருக்கலாம்.

இடை - மெலி மிகுதல்

இது காறும் வல்லின ஒற்று பற்றிப் பார்த்தோம். இனி, இடையின ஒற்று பற்றியும் மெல்லின ஒற்று பற்றியும் பார்க்கலாம்:-

இடையின ஒற்றுகளுள் ‘வ்’ தவிர மற்றவை மிகா: அவ்வண்டி, இவ்வண்டி, எவ்வண்டி - அ, இ-சுட்டு; எ வினா. மெல்லின ஒற்றுக்களுள் ண், ன் என்பன எங்கும் மிகா. மண், பொன் எனத் தனிக்குறிலின் பின் இருப்பின் வருமொழியில் உயிர்வந்தால், மண் + எடுத்தான் = மண்ணெடுத்தான், பொன் + அளந்தான் = பொன்னளந்தான் என இரட்டிக்கும்.

அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம் - எனச் சுட்டிலும் வினாவிலும் ‘ங்’ மிகும்.

அஞ்ஞான்று, இந்நாய், எம்மாடு - எனச் சுட்டிலும் வினாவிலும் ஞ், ந், ம் என்பன மிகும்.

மெய்ஞ்ஞானம், செய்ந்நன்றி, செய்ம்முறை - எனத் தனிக்குறில் பக்கத்தில் ‘ய்’ வந்த நிலைமொழிகளில், ஞ், ந், ம் மிகும்.

மாங்காய், மாந்தளிர், மாம்பழம், விளாங்காய், விளாம்பழம், காயாம்பூ - எனச் சில மரப்பெயர்களில் ங், ந், ம் - மெலி மிகும்.

மேலே, இடை - மெலி மிகுதலில், மிகவும் இன்றியமையாதன எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. எந்த ஒற்றும் மிகுதலோ மிகாமையோ பொருள் பொருத்தம் கருதியேயாம்.