பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

191



மண் + குடம் = மட்குடம், பொன் + குடம் பொற் குடம் என ‘ண்‘ என்பது ‘ட்’ ஆகவும், ‘ன்’ என்பது ற் ஆகவும் திரியும்.

பொன் + தொடி = பொற்றொடி, முள் + தாள் + தாமரை = முட்டாட்டாமரை என நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் ஆகிய இரண்டுமே திரிதலும் உண்டு. இவ்வாறு இன்னும் பல உள.

மேற் குறிப்பிட்டுள்ள புணர்ச்சி விதிகளை யெல்லாம் நன்கு கற்றுத் தெளியின் பிழையின்றி எழுதலாம்; செய்யுள்களைச் சந்தி பிரித்துப் பொருள் புரிந்து கொள்ளவும் இயலும், இவைதொடர்பான நன்னுால் பாக்களை எல்லாம் கற்றுக் கொள்ளவேண்டும்.

வழக்கியல்

‘இலக்கணம் உடையது’ (267) என்னும் நன்னூல் பாவில் உள்ள ஆறு வழக்கியல்களுள், சிறப்பாக மரூஉ, இடக்கரடக்கல், மங்கலம் என்னும் மூன்றையும் கட்டாயம் கற்றறிய வேண்டும்.

புதுச்சேரி புதுவை எனவும், சென்னப்பட்டணம் சென்னை எனவும் மருவி - சுருங்கி - வருவது மரூஉ எனப்படும். இதனை ஒருவகைச் சுருக்கெழுத்து (Short hand) என்றும் கூறலாம். நடைமுறை இலக்கணம் என்ற பெயரில் இது மிகவும் தேவை.

மலங் கழுவுதலைக் கால் கழுவுதல் என்றும், ‘பீ’ என்பதை ‘பவ்வீ’ (ப் + ஈ) என்றும் மறைமுகமாகக் கூறுவது இடக்கர் அடக்கல் ஆகும். இஃதும் மிகவும் தேவை. செத்தாரைத் துஞ்சினார் - இயற்கை எய்தினார் - கைலாச - வைகுந்த பதவியடைந்தார் - திருநாடு அணி செய்தார் என்றெல்லாம் கூறுவது மங்கலம். வழக்காற்றில் இன்ன பிற மிகவும் இன்றியமையாதவை.