பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

சுந்தர சண்முகனார்



தொடரிலக்கணம்

எழுத்துகளால் ஆனது சொல் - சொற்களால் ஆனது சொற்றொடர். சொற்றொடரைத் தொடர் எனவும் வாக்கியம் எனவும் கூறலாம். தொல்காப்பியமும் நன்னூலாரும் எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் எழுதினார்களே தவிர, தொடர் அதிகாரம் எனத் தனியே ஒன்றும் எழுதவில்லை. ஆனால், தொல்காப்பியர் தொடரதிகாரத்தை - அதாவது தொடரிலக்கணத்தை, சொல்லதிகாரத்தின் ஒன்பது இயல்களுள் முதலாவதான ‘கிளவியாக்கம்’ என்னும் இயலுள் கூறியுள்ளார். அதன் பின்பே, பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய சொற்களின் இலக்கணத்தைத் தனித்தனி இயலில் கூறியுள்ளார்.

உளவியல் முறை

சொல்லால் ஆனது தொடராதலின், சொல்லிலக்கணம் முதலில் கூறித் தொடரிலக்கணம் பின்பு கூறுவது ‘காரண காரிய முறை’ (Logic Method) ஆகும். தொடர் பற்றி முதலில் கூறிப் பின்னர்ச் சொற்களைப் பற்றிக் கூறுவது உளவியல் முறை (Psychological Method) ஆகும். இவற்றுள் பின்னதே சரியானது. மக்கள் தொடராகவே பேசுகின்றனர்; சொல் - சொல்லாக இடைவெளி விட்டுப் பேசுவதில்லை. முதற்கால மக்களும் இக்காலக் குழந்தைகளுங் கூட, தொடராகவே பேசினர். பேசுகின்றனர். சில நேரம் தனிச்சொல் கூறினால், ஒரு தொடர் அதில் தொக்கியிருப்பதாகப் பொருள் கொள்ளல் வேண்டும். தனிச் சொல்லுக்கு மதிப்போ பொருளோ இல்லை. தொடராகச் சொல்லும் போது தான் ஒவ்வொரு சொல்லும் உரிய மதிப்பு பெறுகின்றது. கற்பிக்கும் ஆசிரியர், தனித் தனிச் சொல் தந்து சொற்றொடரில் (வாக்கியத்தில்) அமைத்து எழுதும்படி மாணாக்கர்க்குப் பயிற்சி அளிப்பார். தொடரில் வரும்