பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

சுந்தர சண்முகனார்


என்னும் அடியால் அறியலாம். ‘ஓங்கு’ என்னும் வினைத் தொகை, மரம் ஓங்கிக் கொண்டே - உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை அறிவிக்கின்றது. உயர் மடல் என்னும் வினைத்தொகை, மடல் (மட்டை) நேரத்துக்கு நேரம் உயர்ந்து கொண்டிருக்கின்றது என்னும் நயத்தை அறிவிக்கிறது. உயர்ந்துகொண்டே இருப்பதால்தான் ‘மடல் அமர’ என்று கூறாமல், ‘மடல் ஏற’ என இன்னும் ஏறு முகமாகவே இருப்பதாகச் சாத்தனார் புனைந்து ஓவியப்படுத்தியுள்ளார். ஓங்கு தெங்கு - உயர்மடல் என்னும் வினைத்தொகைகளில் பொதிந்து கிடக்கும் மொழி நயச்சுவை - இலக்கண இன்பம் இப்போது விளங்கலாம்.

எனவே, நன்னூலில் உள்ள இலக்கணக் குறிப்புகளைக் கற்பிக்கும்போது, இயன்ற அளவு இலக்கியத்தோடு இணைத்துப் பொருத்திக் காட்டி இன்பம் பெறச் செய்தல் வேண்டும். இதனால், மாணாக்கர் இலக்கணத்தை ஆர்வமுடன் கற்பர்.

இலக்கணத்தின் இன்றியமையாமை

பல இலக்கணச் செய்திகளையும் கற்று மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் வேண்டும் என்பது இதுகாறும் அறிவிக்கப்பட்டது. இலக்கண விதி தெரியாமற் போனால் என்ன? ஏறக்குறையக் கருத்தைத் தெரிவித்தால் போதாதா என்று கூறுபவர் இன்றும் உளர். அவர்கள் பேசுவதுபோல் எழுத வேண்டும் என்றும் கூறுவர்.

இதனால் ஏற்படும் இழப்பு சொல்லுந் தரத்த தன்று. பேசுவதுபோல் எழுத வேண்டும் எனில், யார் பேசுவது போல் எழுதல் வேண்டும். ஒரே மொழியை, மூலைக்கு மூலை வெவ்வேறு விதமாகப் பேசுகின்றனரே. இப்படியே போய்க்கொண்டிருந்தால் மொழி சிதைந்து பிரியும். தமிழில் தொடக்கக் காலத்தில் பேசப்பட்ட சொல்லுருவங்கள்,