பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

207


மாதிரியைப் பின்பற்றாததனால்தான், சோழ நாட்டு மொழியும் பாண்டிய நாட்டு மொழியும் தமிழ் என்னும் பெயரும், சேர நாட்டு மொழி மலையாளம் என்னும் பெயரும் பெற்று வேறு வேறு மொழிகளாய் விட்டன.

இதிலிருந்து அறியக் கூடியதாவது:- இனமும் நாடும் மேலும் மேலும் பிரியாதபடி ஒருமைப்பாட்டைக் காக்கும் தகுதி இலக்கணத்திற்கு உண்டு என்பதாகும்.

இப்பொழுது நடைமுறையில் இருக்கும் புணர்ச்சி விதிகளை மிகுதியாய் மாற்றினால், பழைய எமனா- புதிய எமனா என்று கேட்டதுபோல, பழைய தமிழ் - புதிய தமிழ் என மொழி இரண்டு மொழிகளாகப் பிரிந்துவிடும் இடுக்கண் (ஆபத்து) நேர்ந்து விடலாம்.

இது தொடர்பாக நாம் இப்போது செய்யக் கூடியதாவது:- இப்போது நடைமுறையில் இருக்கும் புணர்ச்சி விதிகளுள், வேண்டியவற்றையும் பொருந்துகின்றவற்றையும் வைத்துக் கொண்டு, வேண்டாதவற்றையும் பொருந்தாதவற்றையும் விட்டு விடலாம் என்பதே.

1.7 வேண்டாப் புணர்ச்சிகள்

வேண்டாதவை என்பன:- முதல் நிலை என்பதை முதனிலை என எழுதாமல் முதல் நிலை என்றே தெளிவாய் எழுதலாம். மானும் மயிலும் என்பதை, நிலைமொழி யீற்று ‘ம்’ என்பதைக் கெடுத்து மானு மயிலும் என்று எழுதாமல், மானும் மயிலும் என்றே தெளிவாக எழுதலாம். கள் மலர் என்பதைக் கண்மலர் என்றெழுதாமல், கள் மலர் என்றே தெளிவாய் எழுதலாம். முள்தாள் தாமரை என்பதை முட்டாட்டாமரை என எழுதாமல், முள் தாள் தாமரை என்றே புரியும்படி எழுதலாம்.