பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

215


உள்ளன. குரங்கின் வால், எலியின் வளை எனினும் பொருள் அன்னவையே. ஆனால், இங்கே ‘இன்’ என்பது, ஆறாம் வேற்றுமை உருபாக உள்ளது. இதை வெற்றுச் சாரியை எனல் பொருந்தாது. குரங்கின் வால், எலியின் வளை என்பன ஆறாம் வேற்றுமை விரியாகும்.

1-9-6 மரத்தின்மேல் ஏறினான்

மரத்தின்மேல் ஏறினான், மரத்தின் கீழ் அமர்ந்தான் என்பனவற்றிலும் ‘இன்’ ஆறாம்வேற்றுமைப் பொருளில் உள்ளது. மரத்தினது மேல்பகுதியில் ஏறினான்; மரத்தினது கீழ்ப்பகுதியில் அமர்ந்தான் எனப் பொருள் கொள்ளல் வேண்டும். மரத்து என்பதில் உள்ள ‘அத்து’ என்பது சாரியை. இதைத் துணை உருபு என்றும் கொள்ளலாம். மரத்தின்மேல், மரத்தின்கீழ் என்பன ஆறாம் வேற்றுமை விரியாகும். மேல் ஏறினான், கீழ் அமர்ந்தான் என்பன ஏழாம் வேற்றுமைத் தொகையாகும். கண், கால், கடை, இடை, தலை, திசை, முன், பின், வலம், இடம், மேல், கீழ் உழை, உழி, உள், அகம் முதலியன இடப்பெயர்களாகும். (வேண்டுமானால், இவற்றை, ஏழாம் வேற்றுமை இடப் பொருள் உணர்த்தும் சொல் உருபுகளாகக் கொள்ளலாம்)

1-10 ஆறாம் வேற்றுமை உருபுகள்

முருகன் வீடு, முருகன் வீடுகள் - என்பன ஆறாம் வேற்றுமைத் தொகை. இவற்றை விரிப்பின் முருகனது வீடு, முருகன் வீடுகள் என வரும். வருமொழியில் வரும் உடைமைப் பொருள் அஃறிணை ஒருமையாயிருப்பின் ‘அது’ உருபும், அஃறிணைப் பன்மையாயின் ‘அ’ உருபும் வரவேண்டும் என்பது விதி. வருமொழிப் பெயர் அஃறிணையாய் இல்லாமல், மகன், நண்பன் என்பனபோல் உயர்திணைப் பெயராயின், முருகனது மகன், முருகனது நண்பன் எனல் தவறு என்று சொல்லப்படுகிறது. எனவே, இவற்றை முருகனுக்கு மகன்,