பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

229


வாய்களை அசைத்துக் கொண்டிருக்கின்றனர். தாயின் இரண்டு பக்க இடுப்புகளிலும் பல சிறு பிள்ளைகள் அமர்ந்துகொண்டு இவ்வாறு செய்கின்றனராம்.

கணவனும் மனைவியும் படுக்கையறையில் தாராளமாக நடந்துகொண்ட பழங்காலம் அது. அதனால், ஒரு குழந்தை பால் மறப்பதற்கு முன்பே - அதாவது அக்குழந்தை பிறந்த பன்னிரண்டாவது மாதத்திலேயே அடுத்த குழந்தை பிறந்து விடுகிறது. பிறந்த குழந்தையைப் பால் குடிக்கவிடாமல் முன் குழந்தை போட்டி போட்டு அழுது அடம் பிடிக்கிறது. ஒரு வயதுக் குழந்தையோடு அதற்கும் முந்திய குழந்தையும் போட்டி போடுகிறது. பசி… பசி… பசி. எனவே பல குழந்தைகள் இடுப்பைச் சுற்றி அமர்ந்துகொண்டு தாயின் முலைகளை முற்றுகையிட்டுள்ளன. வளமான உடம்பு உடையவர்களிலும் வளமற்ற உடலினார்க்குக் குழந்தை மிகுதியாய்ப் பிறக்கும் என்னும் கருத்தும் ஈண்டு எண்ணத் தக்கது.

முதலிலேயே உடல் மெலிவு; துயரமோ மிகுதி - மிகுதி. மேலும் இவ்வாறு குழந்தைகள் பிசைந்து தின்பதால் சீர் அற்ற முலைகளுடன் தாய் பெரிதும் மனம் உடைந்து போனாள். என் செய்வது! உணவு என்ற பேரில் ஏதாவது ஆக்க வேண்டுமே. தோட்டத்துக் குப்பைக் கீரையின் நினைவு வந்தது. குப்பைக் கீரை வற்றாத ‘அமுத சுரபி’யாக நாள்தோறும் அடைக்கலம் தந்து வந்தது. கீரைச் செடிகள் பறிக்கப் பறிக்க மொட்டையாய் விட்டன. வறுமை வந்தும் ஏதாவது அளிக்கும் வள்ளல் போல, மொட்டையாகியும், அதிலிருந்து புதிதாய்க் கிளைத்து முற்றாமல் இருக்கின்ற இளங்கொழுந்துகளைப் பறித்து, வந்தாள், அடுப்பில் நீர் உலை வைத்து அதில் குப்பைக் கீரைக்கொழுந்துகளை இட்டு வேக வைத்தாள். கொழுந்து பஞ்சாய் விட்டது, உப்பு ஒரு கேடா? இருந்தால் தானே