பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

சுந்தர சண்முகனார்


பார்க்கலாம்’ - என்று ஒரு போக்குக் காட்டிப் பார்த்தாள் - பயனில்லை. தாய் ஒன்றும் செய்வதறியாது சொல் லொணாத்துயர் உழந்தாள். இந்தக் கருத்தமைந்த புற நானுற்றுப் பாடல் பகுதியாவது:-

“இல்லுணாத் துறத்தலின் இல்மறந் துறையும்
புல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண்
பால்இல் வறு முலை சுவைத்தனன் பெறா அன்
கூழும் சோறும் கடைஇ ஊழின்
உள்ளில் வறுங்கலம் திறந்தழக் கண்டு
மறப்புலி உரைத்தும் மதியம் காட்டியும்
நொந்தன ளாகி நுந்தையை உள்ளிப்
பொடிந்தநின் செவ்வி காட்டெனப் பலவும்
வினவ லானா ளாகி நனவின்
அல்லல் உழப்போள்......” (160:17-26)

என்பது பாடல் பகுதி. இப்பாடல்களைப் போலவே வறுமையின் எல்லையைக் காட்டுகிற - குமணனைப் பெருந்தலைச் சாத்தனார் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றின் பகுதியைக் காண்போம்.

நீண்ட நாளாய் ஆக்குவதை (சமையலை) மறந்தே விட்ட - கொம்மைகள் உயர்ந்துள்ள அடுப்பிற்குள் ஆம்பி (காளான்) பூத்திருக்கிறது. பசி தாங்க முடியாமல், பால் இன்மையால் தோலோடு தோலாய் ஒட்டிச் சுருங்கிப் பால் வரும் கண்ணும் (துவாரமும்) அடைபட்டுவிட்டதாயின் பொல்லாத வெற்று முலைகளைச் சுவைத்துச் சுவைத்துப் பார்த்தும் பால் கிடைக்காமையால் ‘ஓ’ என அழுகின்ற குழந்தையின் முகத்தைத் தாய் நோக்கிக் கண்களை நீர் நிறைந்த குளமாக்கிக் கொண்டாள். பாடல் பகுதி வருக:-

“ஆடு நனி மறந்த கோடுயர் அடுப்பில்
ஆம்பி பூம்பத் தேம்பு பசி உழவாப்