பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

சுந்தர சண்முகனார்


தொழிலையும் செல்வத்தையும் அழித்தல், அவர்களைப் பற்றித் தூற்றிப் பேசுதல், பழிக்குப் பழிவாங்குதல் முதலிய ஒறுப்புகளை (தண்டனைகளை) மக்கள் பதிலுக்குப் ‘பரிசு’ ஆகத் தருகின்றனர். இன்னா செய்தாரை ஒறுத்தல் அதாவது தண்டித்தல் உலக இயல்பாகத் தெரிகிறது. ‘இன்னா’ என்பதற்கு, இனிமை தராத துன்பம் என்பது பொருள்.

அறநெறி நூல் இயற்றிய வள்ளுவர் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன! தீமை செய்தவர்க்கு ஒறுப்பு தரவேண்டும் என்கிறார். வள்ளுவர் பரிந்துரைக்கும் ஒறுப்பு கடுமையானது; தீமை செய்தார்க்குத் தீமை செய்யப்பட்டவரால் கொடுக்க முடியாத அரிய பெரிய ஒறுப்பாகும். வள்ளுவர் அறிமுகப்படுத்தும் ஒறுப்பை அனைவராலும் அளிக்கவியலாது. அத்தகைய அரிய பெரிய ஒறுப்புதான் யாதோ?

துன்பம் செய்தவர் நானும்படியாக-வெட்கித் தலை குனியும்படியாகத் தரும் ஒறுப்புதான் வள்ளுவரின் பரிந்துரை. ஏச்சுப் பேச்சினால் நாணுவார்களா? அடி உதை கொடுப்பதால் தலை குனிவார்களா? அவர்கட்கு அழிவு செய்வதனால் நாணித் தலை வணங்குவார்களா? மாட்டார்கள். நாணித் தலை குனிவதற்கு மாறாகத் திரும்பவும் தீமை செய்வார்கள் - தீமையிலும் பெரிய தீமைகளைச் செய்வார்கள் - சினம் பொங்கி மேலும் அழிவு வேலை செய்வார்கள். எனவே, அவர்களைத் தலை குனியுமாறு செய்வதற்கு உரிய வழியும் வள்ளுவனார் சொல்லிக் கொடுத்துள்ளார்.

தீமை செய்தவர்க்குத் தரவேண்டிய ஒறுப்பாவது, அவருக்கு நன் முறையில் - நயமான முறையில் நன்மை