பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

சுந்தர சண்முகனார்


“கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்” (312)

என்பன குறள்கள்.

திருவள்ளுவர் சான்றாண்மை என்னும் தலைப்பில் இது போன்ற ஒரு கருத்து வழங்கியுள்ளார். தமக்குத் துன்பம் செய்தவர்க்கும் இன்பமே - இனிமையே செய்யாவிடின், எவரும் சான்றோர் எனப் படுதற்குத் தகுதியாகார் என்பது கருத்து.

“இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு” (987)

என்பது குறள், இன்னும் மேலே சென்றுள்ளார் பொய்யா மொழியார். ‘பண்புடைமை’ என்னும் தலைப்பில் அவர் கூறியுள்ள கருத்துகள் இரண்டினைக் காண்பாம். விளையாட்டாகவும் பிறரை இகழ்ந்து பேசுதல் துன்பத்திற்கு இடமாகும். பிறர் படும் துன்பத்தை உணர்ந்து இரங்குவோர் பகைவர்க்கும் உயர்ந்த பண்பான நற்செயல்களையே புரிவர். தம்மொடு நட்பு கொள்ளாமல் தமக்குத் தீமை செய்தவர்க்கும் நற்பண்புடன் நன்மை செய்யாதவர்கள் மிகவும் கடைப்பட்டவராவர். அதாவது - தாழ்ந்தவராகக் கருதப்படுவர் - என்பன தெய்வப் புலவரின் கருத்துகள்!

“நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி; பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு” (955)

“நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை” (998)

என்பன குறள் பாடல்கள்.

ஈண்டு ‘கருத்து ஒப்புமை காண்டல்’ என்னும் முறையில் ஏசு பெருமானின் கருத்து ஒன்றைக் காண்போமே. “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு”