பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

சுந்தர சண்முகனார்


கியதும், மறைக் காட்டில் திறக்கப்படா திருந்த கதவினைத் திறந்ததும், கன்னித் தண்தமிழ் மொழிச் சொற்களா? அல்லது-வேற்று மொழிச் சொற்களா? என்று வினவுவது போல் மூவர் தமிழின் முதன்மை ஆற்றலை அறிவித்துள்ளார் பாடல்:-

“தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும், முதலை
உண்ட பாலனை அழைத்ததும், எலும்பு பெண்ணுருவாக்
கண்டதும், மறைக் கதவினைத் திறந்ததும், கன்னித்
தண்டமிழ்ச் சொல்லோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்”

என்பது பாடல். இவ்வளவு பெருமைக்கு உரிய மூவர் தமிழைத் திட்டமிட்டு அறைக்குள் போட்டுச் செல் அரிக்கச் செய்ததும், மூவர் வந்தால்தான் கதவைத் திறக்க முடியும் என அடம் பிடித்ததும் கொடுமை என ஒரு சாராரைச் சிலர் தூற்றலாம். ஆனால், மூவர் தமிழை அடியோடு எரித்து விடாமல், அறைக்குள் வைத்துக் காத்து வந்தார்களே - என அன்னாரைப் போற்றுதலே ஒரு வகையில் பொருந்தும்.

தேவாரம்

மூவர் தமிழாகிய முதல் ஏழு திருமுறைப் பாடல்களும் ‘தேவாரம்’ என்று பெயர் வழங்கப் படுகின்றன. இப்பெயர் பாடல் ஆசிரியர்களால் தரப்பட்டதன்று; பிற்காலத் தாராலேயே தரப்பட்டதாகும். இதன் பொருள் என்ன? தே + ஆரம் எனப் பிரித்து, தெய்வ மாலை - அதாவது-தெய்வத்திற்குச் சாத்தும் பாமாலை என்று இதற்குப் பொருள் செய்ய வேண்டும். தே + வாரம் எனப் பிரித்துத், தெய்வ அன்பு - அதாவது தெய்வத்தின்பால் செலுத்தும் அன்பு எனச் சிலர் கூறுவர்.

பல மலர்களால் தொடுத்த பூமாலைபோல், பல்வகைப் பாக்களால் தொகுத்த பாமாலையே தேவாரம் ஆகும்.