பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

சுந்தர சண்முகனார்



பண்டு அரசர், அருளாளர் முதலியோர் வெளியூர்க்குச் செல்லும்போது, உடன் எடுத்துச் செல்லும் சிறு சிறு கடவுள் உருவம் வைக்கப்பட்ட பெட்டி ‘தேவாரப் பெட்டி’ எனப்பட்டது. மற்றும், கடவுள் வழிபாடாகிய தேவாரத்தின்போது (தேவாரம்-கடவுள் வழிபாடு), ஓதப்பட்ட பாடல்கள் நாளடைவில் தேவாரப் பாடல்கள் என்னும் திருப்பெயர் வழங்கப்பட்டன. இந்த அடிப்படையில், பின்னர், மூவர் தமிழ்ப் பாடல்கள் தேவாரம் என்று குறிப்பிடப்பட்டன.

தேவாரத்தின் வேறு பெயர்கள்

தேவாரம் என்ற பெயர் பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே மூவர் தமிழுக்கு வழங்கப்படத் தொடங்கியது. சேக்கிழார், திருப்பதிகம், தமிழ்த்தொடை, உரைமாலை முதலிய பெயர்களாலேயே மூவர் தமிழைக் குறிப்பிட்டுள்ளார். தொடக்கத்தில், சம்பந்தர் திருமுறை-நாவுக்கரசர் திருமுறை - சுந்தரர் திருமுறை எனவும், சம்பந்தர் பதிகம் நாவுக்கரசர் பதிகம் - சுந்தரர் பதிகம் எனவும் மூவர் பாடல்கள் பெயர் வழங்கப் பெற்றன. மற்றும், சம்பந்தர் தேவாரம் ‘திருக் கடைக் காப்பு’ எனவும், சுந்தரர் தேவாரம் திருப்பாட்டு எனவும் பெயர் வழங்கப் பட்டதுண்டு. திருநாவுக்கரசர் பாடல்களே - பதிகங்களே முதல் முதலில் ‘தேவாரம்’ என்னும் திருப்பெயர் பெற்றன.

போற்றிப் பேணாமை

தேவார ஆசிரியர்கள் மூவரும், ஊர்தோறும் சென்று பதிகங்கள் பாடினர். அவை ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டன. அவரவர் காலத்திலேயே அவரவர் பெயரால் நூல் தொகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தக் காலத்தில், முப்பது தலைப்புகளில், தலைப்புக்கு இரு பாடல்கள் வீதம் எழுதினாலும், அப்பாடல்களுக்கு, இன்னார் கவிதைகள்