பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

சுந்தர சண்முகனார்


காக மஞ்சள் பூசி முகத்தை மினுக்குகிறதாம். மலர்கள் மாயப் பொடி (மகரந்தத் தூள் - Pollen) வீசுகின்றனவாம். “என் மருமகள் என் மகனுக்கு என்னவோ சொக்குப் பொடி போட்டு விட்டிருக்கிறாள்” என மாமியார் சொல்வதாகக் கூறப்படும் உலகியல் செய்தி ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. மேலும் ஒரு பாடலில் கவிமணி அறிவிக்கிறார்:

“வண்டின் வரவு எதிர் பார்த்திருப்போம் - நல்ல
வாசமும் வீசி நிற்போம்” (மலரும் மாலையும்)

வண்டுகளை ஈர்க்க மணம் வீசப்படுகின்றதாம். கவுதமப் புத்தர் காப்பியம் என்னும் நூலிலும்,

“மாலை மலர்கள் மணம்வீசி - வண்டை
மயக்கியே தம்பால் ஈர்த்தனவே” (18-15)

என இச் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் அறிவியலார் ‘இயற்கையின் தேர்வு’ (Selection of Nature) என்பர். எனவே, மலருக்கும் வண்ணத்திற்கும் மணத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிவிக்கவே, “வண்ணப் பூவும் மணமும் போலே” என்று பாடினார் பாவேந்தர். அடுத்து, பாடலின் நான்காம் பகுதி வருக:

மகர யாழும் இசையும்

யாழ் தமிழர்களின் இசைக்கருவி. யாழில் பலவகை உண்டு. பேரியாழ், மகரயாழ், சகோட யாழ், செங்கோட்டி யாழ் என்னும் ஒருவகை நான்கனுள் மகர யாழும் ஒன்றாகும். இது, மகர (மீன்) வடிவம் அமையப் பெற்றுப் பத்தொன்பது நரம்புகளைக் கொண்டது. ‘குழலினிது யாழினிது’ என்னும் வள்ளுவர் வாய்மொழி யாழின் இனிமையை அறிவிக்கிறது.

யாழுக்கும் இசைக்கும் நெருக்கம் மிகுதி. பண்டு யாழ்க் கருவியை நிலைக்களமாகக் கொண்டே பெரும் பண்களும்