பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

சுந்தர சண்முகனார்


ஆவது என்ற எண்ணம் உறுத்திக் கொண்டேயிருக்கும். குறை வேலைக்காரர்கள், பொழுது போக்கினால் பெறும் போலி இன்பத்தைக் காட்டிலும், உரிய காலத்தில் முடித்து மன நிறைவு கொள்வதால் உண்டாகும் இன்பமே பேரின்பம்! பேரின்பம்! இந்த உண்மையைப் பலர் உணர்வதில்லை.

சுற்றி வளைக்காமல் சுருங்கச் சொல்லவேண்டு மாயின், எடுத்துக் கொண்ட வேலையை உரிய காலத்திலேயே முற்றும் முடிக்காமல் எச்சமாய் விடுவது-அதாவது-வேலையைக் குறையாக நிறுத்திவைப்பது, நம் திட்டங்களை எல்லாம் முறியடித்து, நம்மைக் குறிக்கோள் அற்றவராக்கி நம் வாழ்வையே சீர்குலைத்து விடும். எனவே, வேலையில் சிறிதும் குறை வைக்கக்கூடாது. வாழ்க்கையில் சிறு பகையிருப்பினும், அது எங்ஙனம் நாளடைவில் பெரிய பகையாக முற்றி நம் தலைக்கே கேடு விளைத்து விடுமோ-அங்ஙனமே குறை வேலையும் செய்துவிடும்.

ஏன், வேறோர் எடுத்துக் காட்டும் உண்டே! தீயை முற்றும் அணைக்காமல் சிறிதளவு எச்சமாய் (குறையாய்) விட்டு வைப்பினும், அது பெருகி வளர்ந்து பெருங்கேடு செய்யுமல்லவா? வினைக் குறையும் அதுபோன்றதே. இதனை நம் வள்ளுவப் பெருந்தகையாரும்,

“வினைபகை என்றிண்டின் எச்சம் நினையுங்கால்
தீ யெச்சம் போலத் தெறும்” (674)

என்னும் குறட்பாவால் தெளிவுறுத்தியுள்ளாரே. எனவே எந்த வேலையினையும் காலம் தாழ்த்துச் செய்தல் கூடாது. உரிய காலத்தில் செய்து விட வேண்டும். வாழ்க்கைக்குத் தேவையானவையாகக் கடமைப்பட்டுள்ள செயல்களில் காலத் தாழ்வு கூடாது என்பது மட்டு மன்று. நல்ல பல அறச் செயல்கள் புரிவதிலும் காலத்தாழ்ப்பு கூடாது. காலத்