பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

71


தோடு செய்தல்வேண்டும். இப்போது நாம் இளைஞராய்த் தானே இருக்கிறோம். பிறகு பொறுமையாக அறச் செயல்கள் புரியலாம்-எனச் சோம்பியிருத்தலும் கூடாது-என்கிறார் வள்ளுவர்:

“அன்றறிவாம் என்னாது அறம் செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை” (36)

என்பது திருக்குறள். இதை நாலடியாரும் வற்புறுத்துகிறது.

நாம் இப்போது இளமைாய்த்தானே இருக்கிறோம் இன்னும் நாள் ஆகட்டும்-பிறகு நல்வினை செய்வோம் என்று சோம்பியிருந்தலாகாது. கையில் பொருள் உள்ள போதோ மறைக்காமல் அறம் செய்யவேண்டும். இளமையை நம்பக் கூடாது. சூறைக் காற்று வீசின், முற்றி முதிர்ந்த கனி வீழாமல் மரத்திலேயே இருக்க, பச்சிளங்காய் விழுந்து விடுவதும் உண்டு-என்று நாலடியார் நவில்கிறது.

“மற்றறிவாம் நல்வினை யாம் இளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்
முற்றி யிருந்த கனி யொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு” (79)

என்பது பாடல். இதையே, முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி நானுாறு என்னும் நூலில் உள்ள ஒரு பாடல் வேறொரு கோணத்தில் விளக்குகின்றது;

ஓடத்தில் ஏறு முன்பே ஏறுபவரிடம் ஓடக்காரர் கட்டணம் வாங்கி விடவேண்டும். அவரை அக்கரை சேர்ந்தபின் அவருக்கு அக்கறை இல்லாமலும் போகக்கூடும். அதாவது, அவரிடம் கட்டணம் வாங்குவது அரிதாகவும் போய் விடலாம். சுங்கப் பணம் வாங்குவதும் இது போன்றதே. எனவே, எதையும் தாங்கும் இளமை உள்ள போதே கல்வி கற்கவேண்டும். முதுமையில் கற்க முடியாமல் போகலாம் என்று இந்நூல் அறிவுறுத்துகிறது.