பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

75



ஆராயாமல் ‘தடாபுடா’ என்று செயலைத் தொடங்கி விடின், பின்னர்ப் பேரிழப்போ பெரும் பழியோ நேரின் அதன் பின்பு பலர் துணையாக நின்று முட்டுக்கொடுத்துக் காக்க முயன்றாலும் உய்யும் வழி கிடைக்காமல் போய்விடலாம்.

சிலர், எது நல்லது - எது கெட்டது என்று எண்ணாமல் - ஒரு தெளிவு இன்றி - ஒரு சூழ்வும் (ஆலோசனையும்) இன்றி, கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறையை விட்டு விட்டு, கடைப்பிடிக்கக் கூடாத வழியில் சென்று இடர்ப்படுகின்றனர். ‘முன்யோசனை’ வேண்டும் என்பது இதுபோல் இடர்ப்பாடு எய்தாமல் வெற்றி பெறுவதற்குத்தான். ஆய்வு இன்றி ஆதாயத்தை எதிர்பார்த்துச் செயலைத் தொடங்கி, இறுதியில் முதலையே இழந்துவிட்டவர்களின் வரலாறுகள் பல உண்டு.

இப்படியே யோசனை - ஆராய்வு செய்து கொண்டிருந்தால் செயல் ஒன்றும் நடைபெறாது: துணிந்து செயலைத் தொடங்கிவிட வேண்டும்; செயலைத் தொடங்கிவிடின், பிறகு அவ்வப்போது நிலைமைக்கு ஏற்ப ஆய்வு செய்து செயல்படலாம் - என்று எண்ணித் தொடங்கிவிட்டுப் பின்னர்த் தலைமேல் கைவைத்துக் கொண்டு அழாத குறையாய் அமர்ந்துவிடக் கூடாது. இதனால்தான் திருவள்ளுவர்

“எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு” (467)

என்ற அறிவுரையை உலகுக்கு அளித்துப் போந்தார்.

தன் வலிமை, தன் படை வலிமை, பகைவர் வலிமை ஆகியவற்றையெல்லாம் ஒத்திட்டு நோக்கி ஆராயாது, திடீரெனப் பகைவர் நாட்டின்மீது படையெடுக்கும் ஓர் அரசின் செயல் பயிரைப் பாத்தி கட்டி வளர்ப்பதைப்போல்