பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இயல் தமிழ் இன்பம் 1. புகு வாயில்'

முத்தமிழ் என மூன்று பகுதிகள் உடையதாகச் சொல்லப்பெறும் பரந்த-விரிந்த பெருமை தமிழ் மொழிக்கு உண்டு. திருவள்ளுவமாலையில் சீத்தலைச் சாத்தனாரால் இயற்றப்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள கீழ்வரும் பாடலில் முத்தமிழைக் காணலாம்:

“மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும்-மும்மாவும்
தாமுடைய மன்னர் தடமுடிமேல் தாரன்றோ
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்” (10)

என்பது பாடல். அகத்தியனை ‘முத்தமிழ் முனிவன்’ எனக் காஞ்சிப் புராணம் (வீரராக-6) கூறுகிறது. மூன்றாம் வகுப்புப் பிள்ளைகள் படிக்கும் நல்வழி என்னும் நூலின் காப்புச் செய்யுளாக ஒளவையாரால் இயற்றப்பெற்றுள்ள,

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா”

என்னும் பாடலிலும், முத்தமிழ் என்னும் பொருளில் ‘தமிழ் மூன்று’ எனக் குறிப்பிடப் பெற்றுள்ளது. இன்னும் பல நூல்களிலும் முத்தமிழ் என்னும் வழக்காறு எடுத்தாளப்பட்டுள்ளது. மூன்று தமிழ் என்பன: இயல் தமிழ்,