பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

79



பூவாடைக்காரி வழிபாடு

பெண் ஒருத்தி கணவன் இருக்கும்போதே கட்டுக் கழுத்தியாய்ப் (சுமங்கலியாய்ப்) பூவுடனும், பொட்டுடனும் இறந்துவிடின், அவளுக்குப் பூவாடைக்காரி என்னும் பெயர் வழங்கிப் புதுப் புடவை எடுத்து வைத்துச் சிறப்பு உணவு வகைகள் செய்து ஆண்டுதோறும் படையல் போடுவது ஒரு சில குடும்பங்களின் மரபாகும். இது மாட்டுப் பொங்கலன்றோ அல்லது வேறொரு நாளிலோ நடைபெறும்.

கண்ணகி வழிபாடு

களவு செய்யாத கணவனை - இழந்த மறக்கற்பு உடைய கண்ணகி தெய்வமாக வழிபடப்பட்டது பலரும் அறிந்த வரலாறு. கண்ணகிக்காக இளங்கோவடிகள் ‘சிலப்பதிகாரம்’ என்னும் ஒரு சொல் கோயில் கட்டினார். அவருடைய தமையன் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்காக ஒரு கல் கோயில் கட்டினான். தமிழ்நாடு முழுவதும் கோயில்கள் எழுந்தன. இலங்கைக் கயவாகு மன்னன் இலங்கையில் கண்ணகிக்குக் கோயில் கட்டினான். வேறு சில இடங்களிலும் கண்ணகி வழிபாடு பரவியது.

திரெளபதி வழிபாடு

கண்ணகி போலவே திரெளபதியும் மனிதப் பெண் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் பாரதக்கதை பரவியதும், கண்ணகி கோயில்க்ளின் இடத்தைத் திரெளபதி பிடித்துக் கொண்டதாக ஆராய்ச்சியாளர் அறிவிக்கின்றனர். இப்போது, தமிழகத்தில் - எனக்குத் தெரிந்தவரையும் வட தமிழ் நாட்டில் - திரெளபதி கோயில் இல்லாத ஊர்களே இல்லை எனலாம். திரெளபதியம்மன் தொடர்பாகப் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இதன் தொடர்பாகத் தீமிதிப்பு, தெருக்கூத்து போன்றனவும் நிகழ்கின்றன.