பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

சுந்தர சண்முகனார்


ஒலிக்கப் பெறும். இந்த O என்பது, ஆங்கிலத்தில் ஆ (Pot) எனவும், ஊ (Roof) எனவும், ஓ எனவும் (Old) எனவும் பலவிதமாக ஒலிக்கப் பெறும். இந்தப் பச்சோந்தித்தனத்தால், பொந்தி ஷெரி என்பதைப் பாண்டிச்சேரி (Pondicherry) என ஆங்கிலேயர் ஒலித்தனர். இப்போது ‘பாண்டி’ என வழங்கப்படுவது மிகவும் வருத்தத்திற்கு உரியது.

புதுச்சேரி பொந்தி ஷெரியாகவும் பாண்டிச்சேரியாகவும் பிறவிகள் (அவதாரங்கள்) எடுத்ததோடு நிற்காமல், மேலும் சில பிறவிகள் எடுத்துள்ளது.

2.3. பெரிப்புளுஸ் - தாலமி

பெரிப்புளுஸ் என்னும் பயண நூல் ஆசிரியர் ‘பொதுகே’ என்றும் புதுச்சேரியைக் குறிப்பிட்டுள்ளனர். புதுச்சேரியை அடுத்துள்ள ‘அரிக்கமேடு’ என்னும் அருகன் மேடே இவர்களால் இவ்வாறு குறிக்கப்பட்டதாம். இந்தப் பகுதியே அப்போது புதுச்சேரியாயிருந்தது; கப்பல் தங்கும் துறைமுகமாயிருந்தது. இதன் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு.

பொதுகே, பொதுகா என்னும் பெயர்கள் உண்மையில் எந்த ஊரை இவ்வாறு குறித்தனவோ? இப்பெயர்கள் புதுச்சேரியைத்தான் குறித்தன எனில், பொருத்தமான பெயர்க்காரணம் தெரியவில்லை.

அயல்நாட்டவர் இவ்வாறு பெயர்கள் வழங்க, தமிழர்கள், தஞ்சாவூரைத் தஞ்சை என்பதுபோல் புதுச்சேரியைப் புதுவை என மரூஉ மொழியாகச் சுருக்கிப் பேசுகின்றனர் - எழுதுகின்றனர். சுற்று வட்டாரங்களில் உள்ள படிக்காத பாமர மக்கள் இதைப் ‘பிச்சேரி’ என்கின்றனர்.