பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

89


Chimera என்பதில் ‘க்கிமெரா’ (ஒருவகைக் கற்பனை விலங்கு) எனவும் ch ககர ஒலி பெற்றிருப்பது காண்க.

கிரேக்கராகிய பெரிப்புளுஸ் ஆசிரியர்க்கு முன்னமேயே, யாராவது கடல் பயணம் செய்து, ஷகர ஒலியுடைய பிரெஞ்சு முறையில் Poducheri என எழுதியிருப்பின், அதைப் பார்த்த பின், ch என்பதற்கு இவர் ககர ஒலி தந்து ‘பொதுகே’ என்னும் ஒலிப்பில் எழுதியிருக்கலாம். இறுதி Ri (ரி) ஊமை எழுத்தாகும். இது சில ஐரோப்பிய மொழிகளில் நிரம்ப உண்டு. இதற்கு முன் யாரும் பயணம் செய்யவில்லை என்று உறுதியாகக் கூறமுடியாது. முறையான வரலாறு கிடைக்காத காலம் அது.

இந்தக் கருத்து முற்ற முடிந்த முடிவு அன்று. இதை மறுக்கவும் செய்யலாம். மற்றும், பொதுகே. பொதுகா என்னும் பெயரால் புதுச்சேரியைக் கூறவில்லை - வேறு ஊரைக் குறிப்பிட்டிருக்கலாம் - எனத் தள்ளியும் விடலாம். (அங்ஙனமெனில், யான் வெள்ளைத் தாள்களை வீணாக்கியவனாவேன்)

3. மணக் குளம்

இப்போது சென்னையில் உள்ள பகுதிகள், ஆங்கிலேயரின் ஆட்சிக்கு முன் பல சிற்றூர்களாக இருந்தவை. இதுபோலவே, புதுச்சேரிப் பகுதிகளும் பிரெஞ்சுக்காரரின் ஆட்சிக்கு முன் பல சிற்றூர்களாக இருந்தனவே. அவற்றுள் ஒன்று ‘மணக் குளம்’ என்பது. புதுவைக் கடற்கரைக்குச் சிறிது மேற்கே மணக்குள விநாயகர் கோவில் என ஒரு கோவில் உள்ளது. மணக்குளம் என்பது ‘மனுகுலம்’ என்பதன் திரிபு எனச் சிலர் கூறுவது பொருந்தாது.