பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

93


குறிப்பிட்ட ஓரினத்தார் மட்டும் மிகுதியாயுள்ள இடம் அந்த இனத்தின் பெயரால் சேரி எனப் பண்டு வழங்கப் பட்டிருப்பினும், இப்போது பலருக்குப் பறைச்சேரி மட்டுமே தெரியும். அதனால் சேரி என்பதை இகழ்ச்சியாக எண்ணும் மனப்பான்மை உண்டாகிவிட்டது.

5.2 இடைச்சேரி

இடையர்கள் மிகுதியாய் உள்ள பகுதிக்கு இடைச்சேரி என்ற பெயர் உண்டு. சீவக சிந்தாமணியின் 422, 423-ஆம் செய்யுள்கட்கு நச்சினார்க்கினியர் வரைந்துள்ள உரைப் பகுதியில் இப்பெயரைக் காணலாம்.

“அங்ஙனம் சிதறின கோவலர் குழலும் கோடாலியும் அங்கே கிடக்கக் காட்டைச் சுழலப் போய், இடைச்சேரியில் மகளிர் நின்று சுழலும்படி, அவ்வேடர் கயிறு போல அத்தலையை நெகிழவிட்டாராயின் இத்தலையை நெகிழ விடார்” - என்பது உரைப்பகுதி. 422-ஆம் பாடலில் உள்ள ‘பள்ளி’ என்பதற்கு இடைச்சேரி என்னும் பொருள் தரப்பட்டுள்ளது. (கோவிந்தையர் இலம்பகம்).

5.3 பார்ப்பனச் சேரி

இது மட்டுமா? உயர் குலத்தார் என்று சொல்லும் பார்ப்பனர் வசிக்கும் இடம் ‘பார்ப்பனச் சேரி’ எனப்பட்டது. இப்பெயரை, நன்னூல் (பொதுவியல்-) 377-ஆம் நூற்பாவின் உரையில், பழைய உரையாசிரியராகிய மயிலைநாதர் குறிப்பிட்டிருப்பதிலிருந்து அறியலாம்:

“எயின நாடு, மற நாடு, பார்ப்பனச் சேரி, அரசர் பெருந்தெரு, வாணிக நகர் எனும் இவை உயர்திணைக்கண் பல விரவிப் பன்மையின் ஒரு பெயர் ஏற்றன”- என்னும் உரைப் பகுதியில் பார்ப்பனச் சேரியைக் காணலாம்.