பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

99



திருக்குற்றாலம்
தென்காசி
15.5.46

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

நேற்று தென்காசிக்குப் போனபோது திருவள்ளுவர் கழகத்துக்குப் போனேன். அங்கத்தினர் ஏழெட்டுப் பேர் வந்து சேர்ந்தார்கள். ஒரு மணி நேரம் வரை அளவளாவிக் கொண்டிருந்தேன். அதில் அவர்களுக்கு விஷயத்தைச் சரியானபடி மதிக்கும் சக்தி வந்திருக்கிறது என்று தெரியவந்தது.

செங்கோட்டையில் பாஸ்கரன் அவர்கள் பேசியது வெகு நன்றாய் இருந்தது. மனசைக் கொள்ளை கொண்டுபோய் விட்டது என்று சொன்னார்கள். இதோடு நிறுத்தியிருந்தால் ஏதோ என்னைத் திருப்தி செய்வதற்காகச் சொன்ன வார்த்தைதான் என்று எண்ணி யிருப்பேன். அப்படி அல்ல என்பது பிற்பாடு சொன்ன வார்த்தையால் வெளியாயிற்று.

நூறு ரூபாய் செலவழித்து அந்த வித்வானை வரவழைத்திருக்க வேண்டாமே என்றும் சொன்னார்கள். ஆகவே உண்மை பலருக்கும் விளங்கி வருகிறது என்பது தெரியவருகிறது.

தாங்கள் பேசிய பேச்சு உண்மையும் உணர்ச்சியும் பொதிந்ததாய் இருந்தது. சபையோர்களின் இதயத்தைத் தொடாமல் என்ன செய்யும்.

நாளை அருமைப் புதல்வி ராஜேஸ்வரி, அம்மாள் எல்லோரையும் அங்கு அழைத்து வரும்படியாக கேட்டுக் கொள்கிறேன்.