பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

ரசிகமணி டிகேசி




திருக்குற்றாலம்
தென்காசி
17.11.48

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

வேலூர் ரயில் மார்க்கமாக திண்டிவனத்தைவிட துரந்தான். ஆனால் அப்படி அதிகமான தூரம் அல்ல, போஸ்ட் மார்க்கமாக, ஆனாலும் வேலூருக்குப் போனபிறகு கடிதப்போக்குவரத்து குறைந்து போய்விட்டது.

சென்னையிலிருந்து 23.10.48 அன்று புறப்பட்டேன். 24, 25 தேதிகளில் திருச்சிராப்பள்ளி முகாம், மாதர் சங்கத்தில் புத்தகாலயம் ஒன்று திறந்துவைத்தேன். அன்று பேசியதை அங்கத்தினர் ரொம்பவும் அனுபவித்துப் பாராட்டினார்கள்.

பொதுவாகப் பெண் இனத்தின் மேன்மையைப் பற்றி பேச ஆடவர்க்கு நேரம் இல்லை. அன்று எனக்கு வசதி இருந்தது. பேசினேன். உண்மையைத்தான் சொன்னேன். அது அவ்வளவு உகந்ததாய் இருந்தது அவர்களுக்கு.

அங்குள்ளவர்களுக்கு நான் ஒரு மாதம் திருச்சியில் தங்க வேண்டுமாம். 10 நாளாவது தங்கி கம்பரையும் தமிழையும் பற்றிப் பேச வேண்டுமாம். சென்னைக்குப் போகும் போது வழி மறிக்கக் கூடச் செய்வார்கள் போல் இருக்கிறது.

அது நல்ல காரியந்தான். பிரயோசனமான காரியந்தான். ஆனால் உடல்நலம் அவகாசம் எல்லாம் வேண்டும். திருச்சி காரியம் மிக்க திருப்தி.

திருச்சியிலிருந்து வண்ணார்பேட்டை, 27 ஆம் தேதி சீவைகுண்டம் போய் குமரகுருபரர் புத்தக சாலையைத் திறந்து வைத்தேன். விழா சிறப்பாய் நடந்தது. என்னைக் கேட்கவே பல ஊர்களிலிருந்தும் அன்பர்கள் வந்திருந்தார்கள்.