பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

143


இங்கே குற்றாலத்துக்கு செயிண்ட் ஜான்ஸ் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் ஜெபரத்னம் வந்திருக்கிறார்கள். இரண்டு நாளாகக் காலை மாலை சந்தித்து நீண்ட பேச்சுகள் பேசி வருகிறோம். பல வருஷங்களாக எனக்குத் தெரிந்தவர்கள் தான். ஒரே நிலையிலிருந்து நெடுகிலும் தமிழை மதித்து அனுபவித்து வருகிறார்கள். இப்படியும் ஒருவர் உண்டா தமிழ் ஆசிரியர்களுக்குள் என்று வியந்த வண்ணமாக இருக்கிறேன். ஜெபரத்னம் பாக்யசாலிதான். தமிழ்ப் பாடலை அனுபவித்துத் திளைக்க முடிகிறதல்லவா. சகாக்களுக்கு முடியவில்லையே. ஜெபரத்னமே வருந்துகிறார்கள். நிற்க.

ராஜேஸ்வரியிடமிருந்து கடிதமே இல்லை. டிப்டி கலெக்டர் வேலை அவளையுமா பிடித்துக்கொள்ளும். நடராஜ் குழந்தை எல்லாரும் செளக்யமாய் பொழுதுபோக்கிக் கொண்டிருப்பார்கள். நல்ல இடந்தான் திருக்கோவிலூர்.

தஞ்சையில் தாங்களும் பழனியப்ப பிள்ளை அவர்களும் இருக்கிறீர்கள். கலை மயந்தான் தஞ்சை மிக்க சந்தோஷம்.

என்னை காலைக் கட்டிப்போட்ட மாதிரி வீட்டுக்குள்ளேயே அடைபட்டிருக்கிறேன். நண்பர்களையும் அன்பர்களையும் நான் போய் பார்க்கிறது என்பது முடியாத காரியமாய்ப் போய்விட்டது. மலை தான் மகமதிடம் வர வேண்டியிருக்கிறது. சதாசிவம் கல்கி எம்.எஸ். எல்லாரும் இரண்டு நாளில் இங்கே வருகிறார்கள். செம்மங்குடியின் மகள் கல்யாணம் இங்கே குற்றாலத்தில் 25.5.52 அன்று.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்

❖❖❖