144
ரசிகமணி டிகேசி
திருக்குற்றாலம்
தென்காசி
26.10.52
அன்பான பாஸ்கரனுக்கு,
தங்கள் கடிதம் வந்து ஒரு மாசம் ஆகியும் பதில் எழுதத் தாமதம் ஆகிவிட்டது. தாமதம் ஆகிவிட்டதற்குக் காரணம் கிடையாது. கால தத்துவந்தான் பொறுப்பு.
தாங்கள் எங்கே போனாலும் செளகரியமாய்ப் போய்விடும். நல்லார்க்குத் தம்மூர் என்று ஊரில்லை.
தமிழில் பற்றுடையவர்கள் கும்பகோணத்தில் இருக்கிறார்கள். (திருநெல்வேலி அல்ல கும்பகோணம்) தூண்டுகோலாகத் தாங்கள் போயிருக்கிறீர்கள். விளக்கு அணைந்து போய்விடாது. மிக்க சந்தோஷம்.
தீபாவளி, மக்கள் மருமக்கள்மாருடன் கோலாகலமாய் நடந்து வாழ்க்கைக்குப் புது ருசியைக் கொடுத்திருக்கும்.
ராஜேஸ்வரி தான் அங்கேயே இருக்கிறாள். பேறுகாலம் நவம்பர் மாசம், உடம்பு செளரிகயமாக இருக்கிறதல்லவா. வாசிப்பை அடியோடு கட்டி வைத்துவிட்டு வீட்டு வேலையைப் பார்க்கவேணும். அதுதான் டானிக்.
கம்பாமாயணப் புதுப்பதிப்புக்காக காகிதம் அவ்வளவும் ஹிலால் பிரஸ்ஸுக்கு வந்துவிட்டது. டைப்புகளும் அநேகமாய் வார்த்தாய்விட்டது. 10 நாளில் அலட்டிக்க ஆரம்பிக்கலாம். பதிப்பு விஷயமாகப் பலரும் ஆர்வத்தோடு பங்கெடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். அப்படியெல்லாம் கம்பரோடு உறவு கொண்டாடும்படி இருந்தால்தான் கலை பிழைக்கும். இது விஷயமாகப் பிறகு எழுதுகிறேன்.