கடிதங்கள்
19
முகாம், மத்தளம்பாறை, தென்காசி 20.5.38
நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,
நேற்று தென்காசி வந்தேன். இன்று சாயங்காலம் இங்கு வந்தேன். நடராஜனும் பாட்டியும் உடன் வந்திருக்கிறார்கள். நாளை இங்கே இருந்து புறப்பட்டு. சாயங்காலம் வண்ணார்பேட்டை வந்து சேர உத்தேசம்.
நாங்குனேரியில் கம்பராமாயணப் பாட்டும், பாரதி விழாவும் தங்கள் விருப்பம்போல எல்லாருக்கும் திருப்தியை உண்டாக்கின. வட்டத்தொட்டி நண்பர்களுக்கு என்றும் இல்லாத கோலாகல நாளாய் இருந்தது. பஸ்ஸில் வரும்போதும் வந்து சேர்ந்த பிறகும் பேச்செல்லாம் நாங்குனேரி வைபவந்தான். எல்லாருக்கும் எப்படியாவது வராதவர்கள் வயிற்றில் பொறாமை பற்ற வேண்டும் என்ற விஷயம் ஏற்பட்டு சாப்பாட்டைப் பற்றியும் உல்லாசத்தைப் பற்றியும் ரொம்ப ரொம்ப விளம்பரம் செய்யத் தலைப்பட்டு விட்டார்கள். எல்லாருமே எண்ணுகிறார்கள். இதோடு விட்டுவிடக் கூடாது, நாங்குனேரியைப் பார்த்து இன்னொரு படையெடுப்பு எடுக்க வேண்டியதுதான் என்று... நாள் நட்சத்திரம் பார்ப்பதாகவும் எண்ணம் இல்லை. தாங்கள் மறந்தாவது தலையசைக்க மாட்டீர்களா... போதும் அவ்வளவு என்றிருக்கிறார்கள்.
நம்முடைய நாங்குனேரி நண்பர்கள் எல்லாருக்கும் ரொம்பவும் விசாரித்தாகச் சொல்லவேணும்.
ஹிந்து கலாசாலையிலும் பாரதிவிழா சிறப்பாக நடந்தது. பாரதியின் மனைவியும் பேத்திப் பெண்களும் விஜயம் செய்தார்கள். பேத்திப் பெண்கள் பாடிய பாட்டு ரொம்ப