பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடிதங்கள் 21

வண்ணார்பேட்டை - 6.9.38 நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தாங்கள் மிக்க அருமையோடு எழுதிய கடிதம் வந்து சேர்ந்தது. வட்டத்தொட்டி நண்பர்களுக்கு அதை வாசித்துக் காட்டினேன். எல்லாருமே தங்கள் விருப்பத்திற்கிணங்கி நாங்குனேரி வர ஆசைப்படுகிறார்கள். ரீனிவாசராகவன் மாத்திரம் ஏதோ முடியாது என்று காலைத் தேய்த்தார்கள். காரணம் கேட்டதில் ரஜாநாள் அன்றைக்கு ஆரம்பிப்பதால் ஊருக்குப் போய்விட்டு வரவேண்டும் என்றார்கள். இதைக் கேட்டதும் அங்கிருந்த எல்லாருக்குமே கோபம் வந்துவிட்டது. நாங்குனேரிக்குப் போய்விட்டு வந்தபிறகு எவ்ளவு நாள் வேண்டுமானாலும் ஊருக்குப் போங்கள் என்று சொன்னார்கள். உடனே ராகவன் நல்லவர் ஆய்விட்டார். எல்லாருக்கும் தான் நல்லவன்தான் என்று காட்டிக் கொள்வதற்கே அப்படி பிகு பண்ணினார்களோ என்னமோ. வி.பி.எஸ்.உம் வந்தால் நன்றாய் இருக்கும். பாளையங்கோட்டை முனிசிபல் கமிஷனர் இராமலிங்க முதலியார் அவர்களும் வட்டத்தொட்டிக்கு வந்திருந்தார்கள். அவர்களையும் தாங்கள் பேரில் அழைத்தால் அநேகமாய் அவர்களும் வரலாம். அவர்களுக்குத் தமிழிலே அபாரமான ஆசை. சென்ற ஞாயிற்றுக்கிழமைதான் எங்களுடன் இருந்து கம்பராமாயணம் கேட்டார்கள். ரொம்பவும் அனுபவித்தார்கள். அவர்களுக்குத் தாங்கள் ஒரு கடிதம் தனியாய்ப் போடலாம்.

யார் யார் எல்லாம் என்பதை விபரம் தெரிந்த பின்பு எழுதுகிறேன். எப்படியும் மத்தியான சாப்பாட்டுக்குப் போய்விட வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். காலையிலே புறப்பட்டு வந்தால் ரொம்ப நல்லது என்றும் சொல்லியிருக்கிறேன்.