56
ரசிகமணி டிகேசி
ஏரோ
மீனம்பாக்கம்
26.3.42
அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,
தங்கள் கடிதம் (23.3.42) கிடைத்தது. ரொம்ப சந்தோஷம். வி.பி.எஸ். அவர்களை தமிழ் அன்பர்கள் பலரும் பார்க்க விரும்புகிறார்கள். கம்பர் விழாவுக்கு முதல் நாள் தலைமை வகிக்க இணங்கியது ரொம்ப நல்ல காரியம். 28.3.42 மாலையே நான் காரைக்குடிக்குப் போய்ச் சேரலாம் என்று எண்ணுகிறேன். வி.பி.எஸ். அவர்களுக்கு ஜாகை செளகரியமாக அமைக்கும்படி சொல்லி விட்டிருக்கிறேன்.
நண்பர் கணேசன் அவர்கள் டில்லிக்குப் போயிருந்தார்கள். காரைக்குடிக்குத் திரும்பிய விபரம் தெரியவில்லை. எப்படியும் 29 ஆம் தேதி அன்று கன்னித்தமிழ் வாழ்க, கம்பன் வாழ்க என்று முழங்குவதற்கு விழாக் கொட்டகையில் வந்து குதித்துவிடுவார்கள்.
தங்கள் பாதுகா பட்டாபிஷேகம் சமீபத்தில் கிடைத்தது. முகப்புப் படம் புத்தகத்தை எடுத்துக்காட்டுகிறது. வ.வெ.சு. ஐயரின் தீர்ப்பு கம்பருக்கு ரொம்ப அவசியமான தீர்ப்பே. பாலர்களுக்கு என்று புத்தகம் ஏற்பட்டிருந்தாலும் அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் அனேக பாடல்களை அனுபவிக்கமுடியும். விஷயத்தை வசனத்தில் விளக்கி யிருப்பதால் கஷ்டம் இராது வாசிப்பதில். தமிழர்கள் மீது கம்பனை எப்படியெல்லாமோ விட்டெறிய வேண்டியிருக்கிறது. என்னத்தைச் சொன்னாலும் தோலுமேலே தொண்ணூறடி துடைத்துப் போட்டால் ஒண்னுமில்லை என்ற கணக்குக்கு வருகிற ஆசாமிகள் தானே மிகுதி. கம்பனைப் படித்து வந்தவர்களுக்கு இப்போது கொஞ்சம் அஸ்வாரஸ்யம் ஏற்பட்டு வருகிறது என்று தெரிகிறது. பள்ளிக்கூடத்தில்