பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

ரசிகமணி டிகேசி


முறை போயிருக்கிறேன். அங்கு பேசப்படுவதெல்லாம் புரியாத வயது. வயிற்று விருந்து மட்டும் நினைவிருக்கிறது. "இந்த நாடு முழுவதும் வட்டத்தொட்டி உறுப்பினர்களின் வீரமுழக்கம் கேட்கிறது இன்று" என்று அப்போது தூத்துக்குடியில் பிரபலமாயிருந்த வக்கீல் ஏ.சி. பால்நாடார் அவர்கள் கார்டியன் என்ற பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.

வட்டத்தொட்டியின் தலைவரும், ஸ்தாபகரும் ரசிகமணி டிகேசிதான். ஆனால் அதைத் தாங்கிநின்ற கற்றூண் செயலாளர், தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்தான். நல்ல தமிழறிவு படைத்த குடும்பத்திலிருந்து வந்தவர். கல்லூரியில் பயிலும் காலத்திலேயே, அவருடைய தமிழார்வத்தை மேலும் வளர்த்தவர் சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளையவர்கள். பின்னர், முதுபெரும் புலவர் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் அவர்களின் அறிமுகம் கிடைத்து, கிட்டத்தட்ட அவருடைய இலக்கியப் பணிகளுக்கெல்லாம் உறுதுணையாக இருந்து மேலும் தம் தமிழ் அறிவை வளர்த்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து ரசிகமணி டிகேசியினால் காந்தம் போல கவரப்பட்டு, அவருடைய நிழலில் ஒதுங்கிய பின்னர்தான் தமிழ்க்கவி என்றால் என்ன? கம்பன் யார்? அவன் படைத்த காவியத்தின் மகிமை என்பதெல்லாம் புலப்படத் தொடங்கிற்று என்று தொண்டைமானே பெருமிதத்துடன் பேசுவார்.

அரசாங்க அலுவல் காரணமாக, தொண்டைமான் ஊர் ஊராக மாற்றலாகிப் போக வேண்டியிருக்கும். அப்படி அவர் அந்த ஊருக்குப் போய்ச்சேர்ந்த உடனே, அங்கே ஓர் இலக்கியச் சங்கம் முளைவிடும். அது வளர்ந்து செழிப்படைய, டிகேசியின் தலைமையில் 'வட்டத்தொட்டி'யுமே, அந்தந்த ஊர்களுக்கு முகாம் போகும். "தமிழின் பின் சென்றார் பச்சைப் பசுங்கொண்டலான பெருமாள்."அப்படியே இந்த வட்டத் தொட்டியுமே பாஸ்கரன் வேலை பார்க்கும் ஊர் தேடிப் போகிறது என்று பாராட்டுவார்கள் நண்பர்கள். ரசிமகணி,