பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

ரசிகமணி டிகேசி


மனசில் உண்டான எழுச்சிகளை அப்படி அப்படியே கொட்டிவிட்டீர்கள். கொஞ்சம் குறைத்துக் கொட்டியிருக்கலாமே என்று அடிக்கடி படந்தான் செய்கிறது. ஆனால் கரைபுரண்டு வரும் அன்பை யார் தடுக்க.

படிக்கும்போது அனுபவித்துக் கொண்டிருந்தது விஷயம் பற்றி அல்ல. வார்த்தைக்குப் பின்னால் துடித்துக் கொண்டிருந்த தங்கள் தூய உள்ளத்தைத்தான் பார்த்து அனுபவித்துக் கொண்டிருந்தேன். அன்பானது, தான் பிறக்கும் உள்ளத்தை ஆனந்த மயம் ஆக்குகிறது. அதோடு எந்த உள்ளத்தில் பாய்கிறதோ அந்த உள்ளத்தையும் ஆனந்த மயம் ஆக்குகிறது. ஆகவே நம்மிருவருக்கும் ஆனந்தப் பேறு கிடைத்துவிட்டது. போதும்.

தங்கள் அன்பு ஆர்வம் உல்லாசம் எல்லாவற்றையும் பேச என்ன என்ன கும்மாளி எல்லாமோ போட்டுக் கூத்தாடுகிறது தமிழ். இவ்வளவு கூத்தாட்டமும் வேறு ஒரு பொருளைச் சுற்றி நடந்தால் எவ்வளவோ நன்றாய் இருக்குமே என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் தமிழின் விளையாடல்களைக் காட்டவா புத்தகத்தை எழுதியிருக்கிறது.

இங்கே ஆனந்தி, ஆனந்தியின் அம்மா, எம்.எஸ், சதாசிவம், கல்கி, ராஜாஜி எல்லாருக்கும் சந்தோஷம்.

கலியாணப் பெண்ணை ஜோடித்த மாதிரி மேலே சொன்ன பாத்திரங்களை வைத்து புத்தகத்தை ஜோடித்து விட்டீர்கள். ரொம்ப சந்தோஷம்.

ஐம்பது வருஷத்துக்கு முன் என்னைப் பெற்ற அண்ணி காலம் சென்று போனாள். அவளுக்கு எவ்வளவோ சந்தோஷத்தை அளித்திருக்கும் புத்தகம். அவள் ஸ்தானத்திலிருந்து இப்போது அனுபவிக்கிறாள் அருமைப் புதல்வி ராஜேஸ்வரி.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்