உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முருகன் துணை

இரத்தினகிரி அருள்மிகு பாலமுருகன்

அந்தாதி


திருமகள் மார்பன் மருகன், அழகன், திறல் உடையான்,
அருள்மிகு கின்ற இரத்தின நற்கிரி ஆர்பெருமான்,
மருவும் குறமகள் நோக்கிற் கலந்து வருந்தியவன்,

குரு எனும் பால முருகன் திருவடி கூர்துணையே.

(1)



துணையும் தொழும்தெய்வ மும்பெற்ற தாயுடன், சுற்றமுமாய்
இணையும் குமரன், இரத்தின நற்கிரி ஏய்ந்தகுகன்,
பணைஎனும் தோளுடை வள்ளி அணைந்த பரம்பரனை

அணைந்து வணங்குவார் எந்நாளும் அச்சம் அகன்றவரே,

(2)



ஏதும் இணையிலா வீரம் உடையவன், எண்ணமதிற்
கோது சிறிதும் இலாதவர் போற்றக் குதுகலிப்பான் ;
வாதில் இரத்தின மாமலைப் பால் என்றும் வாழ்பெருமான் ;

சாதுவாம் பால முருகன் அடிமையுள் தங்குவவே.

(3)



தங்கம் பெரிதென்று வீணே முயன்று தவிப்பவர்கள்
மங்குவர் ; பால முருகன் மருவிய மாமலையாம்
துங்க இரத்தின நற்கிரி மேவிய சுந்தானை,

மங்களப் பால முருகனை வாழ்த்தின் வளம்வருமே.

(4)



வருவதும் போவதும் ஆய பிறப்பு மரணத்தினில்
மருவுறு துன்பம் அகற்ற என் றால்ஓர் வழிசொல்லுவன் ;
திருவுறும் சீர்கொள் இரத்தின நற்கிரித் தேவனையே

குருஎனப் போற்றி வணங்கிடின் இன்பம் குலவுறுமே.

(5)



குலவுவர் ; மாதர்கள் தம்மொடு கூடிக் குதுகலிப்பர் ;
நிலவிய வாழ்வினை வீண்ஆக்கி என்றும் நிலைபெறும்அம்
மலைமுகன் சேவடி வாழ்த்தா திரத்தின மாமலையில்

நிலைபெறும் பால முருகனை ஏத்திடின் நீடும் இன்பே.

(6)

8