உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்பம் இனிமேலும் வேறொன்றுண் டென்னவே எண்ணல் இன்றி
மன்பெரும் சீர்கொள் இரத்தின நற்கிரி வாழ்முருகன்,
அன்பிற் சிறந்தவன், பால முருகன் அடிமைதொழும்

பொன்பெற்ற கீர்த்தி வடிவேற் குமரனைப் போற்று நெஞ்சே

(7)



நெஞ்சே, உனக்கொன்று சொல்லுவன்; கேள்; இந்த நீள்நிலத்தில்
எஞ்சாத இன்பம் உறவேண்டின் ரத்தின ஏர்மலையில்
துஞ்சாத தேவர் தொழுகின்ற வேலன் துணையடிகள்

நம்சார்பென் றெண்ணினால் வாராத இன்ப நலம்வருமே.

(8)



உருவார் பலர்: வந்து தம்குறை தீர்வர்; மகிழ்ச்சியுடன்
மருஆர் திருமணம் செய்யப் பெறுகுவர்: மாமுருகன்
திருவீறு கின்ற இரத்தின நற்கிரிச் சேய்அடிகள்

வெருவறப் போற்றித் தொழும்அவர் பேறு விளம்புமதே ?

(9)



விளம்புகைக் கெட்டாத வீரம் உடையவன், வேல்முருகன்;
உளம்புக எண்ணிடின் எல்லாம் உதவும் உயர்அருளான்;
களம்பெறும் ரத்தின நற்கிரி மேவிய கார்மயிலோன்;

தளம்பெறும் சேவடி போற்றித் துதித்தால் தவம்அதுவே.

(10)



தவம் செய்ய என்றெண்ணிக் கானகம் தேடித் தழையை உண்டு
பவமதை நீக்கல் மிகஎளி தோ ? அருட் பாவலவன்
சிவமார் அருண கிரிநாதன் போற்றிய சேய்அடியைக்

குவலயம் போற்றும் இரத்தின நற்கிரி கூடுகவே.

(11)



வேதனைக் குட்டிச் சிறையிட்ட வேலன், விரும்புபவர்
வேதனை நீக்கிப் பிறப்பறுப் பான்; ரத்தின விற்கிரியில்
நாதனைப் போற்றி வணங்குமின்; என்றும் நலம் பெறலாம்;

சீதள வாரிச பாதனைப் போற்றித் திகழுமினே.

(12)



மின்இடை மாதர் மயக்கினில் வீழ்ந்து விழற்கிறைத்த
நன்னிற நீர்என்ன வாணாளை வீணாக்கி நாசம் உறத்
துன்னிடின் என்பயன் ? ரத்ன கிரிஉறை துங்கவனாம்

மன்னவன், பூந்தாட் சரவணன் பாதம் வணங்குமினே.

(13)



சரவணப் பொய்கையில் தோன்றிய வாறுபேர் தாம்சுரந்து
மருவிய பாலினை உண்ட பிரான்ரத்ன மாமலையில்
திருவுருப் பால முருகன் அடிமைக்குத் தேசுபெற

அருளிய -நாதன் அருள்உறின் வாரா தவை உளவோ?

(14)

9