பக்கம்:இரவு வரவில்லை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. இரவு வரவில்லை!

துணைபிரிந்த புட்களேன் கூடுவர வில்லை?
தொழுவத்தை மறந்தனவோ பசுமாட்டுக் கூட்டம்?
இணைமலரின் கட்டவிழ்த்தே இறுகணைக்கும் தேனீ
வரவில்லை! இன்னுமேனோ இரவுவர வில்லை?
அணையுடைத்துப் பாய்கின்ற காட்டாறு போல
அவளருகிற் பாய்ந்தோடும் நெஞ்சிற்கென் சொல்வேன்?
கணைவிழியாள், கணுக்கரும்பு, கவிதைத்தேன் ஊற்றைக்
கையாலே அணைப்பதற்கேன் இரவுவர வில்லை?
1


மாந்தளிரைப் போற்பனையை மாற்றுகின்ற வெய்யோன்
மலைமுகட்டில் வேகாது வெந்துதணி கின்ருன்!
தீந்தமிழின் இடைவந்த கலப்புமொழி போலச்
செவ்வானை மிகவிரைவாய் விழுங்கவரும் கங்குல்
மாந்தோப்புக் குளிர்காற்றால் மயங்கியதோ? அன்றி
மறிகடலின் இடைச்சென்றே ஒளித்ததுவோ? காட்டுப்
பூங்குயிலை, என்னுயிரை, என்வாழ்வின் ஊற்றைப்
போய்த்தழுவ இன்னுமேனோ இரவுவர வில்லை?
2


கடமையே பெரிதெண்ணும் ஒன்றிரண்டு விண்மீன்
கண்சிமிட்டும்! மேல்வானில் கண்சிமிட்டும் வெள்ளி!
படைவெட்டித் தீந்தமிழின் பகைவெட்டிச் சாய்த்த
படுகளம்போல் வானெல்லாம் இரத்தப்பே ராறு!
நடைகட்டா திருப்பதென்ன செங்கதிரோன் இன்னும்?
நானின்பம் அடைவதிலே பிறர்க்கென்ன துன்பம்?
அடைபட்டுப் போனதுவோ மேற்றிசையிற் கங்குல்?
ஆருயிரை அணைப்பதற்கேன் இரவுவர வில்லை?
3


3
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/12&oldid=1179471" இலிருந்து மீள்விக்கப்பட்டது