பக்கம்:இரவு வரவில்லை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காடெல்லாம் அடங்கிற்று! காட்டோரம் பாயும்
நல்லருவி என்னைப்போற் காதலறி யாதோ?
வீடெல்லாம் அடங்கிற்றே! ஆனாலும், இந்த
வெய்யோனுக் கின்னமுமா அடங்கவில்லை வேலை?
கூடெல்லாம் அடங்கிற்று கொம்பெல்லாம் வண்டின்
கும்மாளம்! வானெல்லாம் வயிரமணிக் குப்பை!
பாடெல்லாம் அவளுக்கே! என்னுயிராம் இன்பப்
பைந்தமிழைத் தழுவுதற்கோ இரவுவர வில்லை!
4


வந்துவந்து நச்சரிக்கும் என்னின்பச் சிட்டு
மாந்தளிராம் சிறுகுழந்தை அடங்கிற்றுப் பாயில்!
நொந்தலுத்த என்மனைவி நெய்யமுது வீட்டின்
அடுக்களையில் நுழைந்துவிட்டாள்! தனித்தென்னசெய்வேன்?
புந்தியிலே வெறியேற்றி என்னுடலை, ஊனைப்
புதுமைசெய்யும் பேரழகி, புனையவொண்ணாப் பாவை
வந்திருப்பாள் இந்நேரம்! ஒடோடிச் சென்று
வாரிச்சேர்த் தணைப்பதற்கேன் இரவுவர வில்லை?
5


தொல்லைபல எனக்களித்த பகற்பொழுது மேற்கில்
தொலைந்ததுவே! ஆனாலும், தொலையவில்லை அந்தி!
கொல்லன் உலை போல்மேற்குத் தொடுவானம் கண்டேன்!
குளிர்தென்றற் காற்றுக்குப் போக்கிடமா இல்லை?
மெல்லவரும் இரவுக்கோ இனியென்ன வேலை?
வெளிப்பரந்த செங்கதிர்கள் மேற்றிசையில் இன்னும்
தொல்லைசெய்யக் காரணமென்? நான்செய்த தென்ன?
தூயதமி ழைத்தழுவ இரவுவர வில்லை!
6



4
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/13&oldid=1179480" இலிருந்து மீள்விக்கப்பட்டது