பக்கம்:இரவு வரவில்லை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2. என்ன செய்வாய்?

தொலைவினிலே மணிப்புறவு குரல்கொடுக்கக் கேட்டேன்;
தொடுவானப் பசுந்தோப்பு நெடுமலைபோல் தோன்றும்
நிலைஎண்ணி உனைநினைந்து நின்றிருந்தேன்! வந்தாய்!
நிறைகுளத்துத் தாமரையில் மான்பாயக் கண்டேன்!
விலைஇல்லா ஒவியமே! வீசுமிளங் காற்றே!
வீணேஏன் முகம்மறைத்தாய்? கைச்சிறைக்குள் திங்கள்
கலையழகைப் பாழாக்கல் இங்குத்தான் கண்டேன்!
கணுக்கரும்பே குற்றாலம் சிரிப்பதற்கென் செய்வாய்?
1


வானத்து வெண்ணிலவு மரமடர்ந்த தோப்பில்
வந்ததுவே! ‘இளம்பிடியோ? மயில்தானோ?’ என்றே
நான் நினைத்துக் கொண்டிருந்தேன்; உனைநேரிற் கண்டேன்;
நடைகண்டேன்; விழிகண்டேன்! வேல்!வேல்! வேல்! வேலே
ஏனோநீ முகம்மறைத்தாய்? மலைபூக்கும் காந்தள்
தாமரையில் பூத்திருத்தல் இங்குத்தான் கண்டேன்!
தேனாளே! என்னுயிரே! என்இன்பக் கிள்ளாய்!
திருக்கும்ப கோணமதோ சிரிப்பதற்கென் செய்வாய்?
2


‘இவ்வேளை எங்கிருப்பாய்? என்செய்வாய்?’ என்றே
ஏதேதோ நான்எண்ணி ஏங்குகின்ற மாலை,
செவ்வல்லி தீச்சுடர்போற் குளத்தினிலே பூக்கும்!
சென்றடையும் வெய்யோனை நின்றிருந்து பார்த்தேன்!


•வல்லம்-ஒர் ஊர்.


5
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/14&oldid=1179485" இலிருந்து மீள்விக்கப்பட்டது