பக்கம்:இரவு வரவில்லை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. ஆர் ஓலை விட்டார்?


வேலியிலே பூக்களெல்லாம் பூத்தனவே அத்தான்!
மேல்மொய்க்கும் வண்டுக்கார் தூதோலை விட்டார்?
கூலிக்குப் பெறுவதுவோ மாறாத காதல்?
குறிப்பறியார்க் கிவ்வுலகில் எதுதான்கை கூடும்?
போலிக்கு வரவேற்பாம் ஒன்றிரண்டு நாட்கள்!
பொன்னுருக்குப் பாய்கின்ற அந்திக்கு முன்னர்க்
காலிக்கு நீர்காட்டும் குளத்தினிலே அல்லி
கடைவாயிற் சிரிப்படக்கிக் காத்திருக்கக் காண்பாய்!


வானகத்து மேற்றிசையில் ஒளிமங்கிப் போச்சாம்!
வரச்சொல்லி விண்மதிக்கிங் கார்ஓலை விட்டார்?
கானகத்து மலைமுகட்டு மெல்லருவி என்றும்
கடல் தாவி வருவதன்றி வேறெங்கே போகும்?
போனதெலாம் போகட்டும்; வெள்ளியலை மோதும்
பூக்குளத்தின் நடுவினிலே தலைதாழ்த்திச் சோங்கி
ஏன்நிற்கும் தாமரையென் றெவரேனும் கேட்டால்,
என்னுயிரே! எனதத்தான்! ஏதுபதில் சொல்வாய்?


வீட்டோரத் தோப்பினிலே மரம்பழுத்த தத்தான்!
மேல்தாவும் அணிலுக்கார் தூதனுப்பி வைத்தார்?
காட்டோரப் புன்செயிலே வரகுவிளைந் தாலும்
கல்லுரலுக் கென்றேனும் வந்தாக வேண்டும்!
கூட்டோரம் அந்தியிலே பெண்புறவு கூவும்
குரல்கேட்டு யாரேனும் என்னென்று கேட்டால்,
மீட்டாத மெல்யாழ்க்கு விரலன்றி வேறு

எதுவேண்டும் என்றேனும் சொல்வாயோ அத்தான்?

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/21&oldid=1180047" இலிருந்து மீள்விக்கப்பட்டது