பக்கம்:இரவு வரவில்லை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7. மறந்து போ!

புள்ளினம் அடையும் கூட்டில்!
பொழுதுசென் றடையும் மேற்கில்!
கள்ளவிழ் மலரைத் தேடும்
கருவண்டு! வந்தாள் இல்லை!
பள்ளத்தில் உருண்டு பாயும்
அருவியின் பாட்டைக் கேட்டேன்;
‘உள்ளமே! மறப்பாய்!’ என்றேன்!
அவளையா மறக்கும் உள்ளம்?
1

மறந்துபோ எனது நெஞ்சே!
மலையொன்றும் முழுகி டாது;
பறந்துபோய் அவளைச் சுற்றிப்
படிகின்றாய்! கண்ட தென்ன?
முறையின்றி வேண்டாப் போழ்தில்
முன்தோன்றி இதழைக் காட்டி
மறைகின்றாள்! எனைவாழ் விக்கும்
மனமவட் கில்லே நெஞ்சே!
2

மருந்தொன்று கிடைத்தி டாதோ?
வாழ்வினில் துன்பம் இல்லை!
பெருந்தோப்பிற் குரல்கொ டுத்தாள்;
பிள்ளைபோல் உள்ளங் கொண்டாள்;
அருந்தென்றற் குளிர்க்கை நீட்டி
அணைக்கின்றாள்; எட்டித் தாவ
விரைந்தோடி மறைகின் றாளே!
வெறுத்துநீ மறப்பாய் நெஞ்சே!
3


15
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/24&oldid=1179527" இலிருந்து மீள்விக்கப்பட்டது