பக்கம்:இரவு வரவில்லை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. பக்கத்தில் நீ இல்லை!

செக்கச் சிவந்தது மேற்குவானம்!-ஒளி
சிந்திப் பரந்தது தங்கவொளி!
பக்கத்தில் நீஇல்லை என்றாலே-தோன்றும்
காட்சியைப் பார்க்க முடியவில்லை!
1


அந்தி மயங்கிற்று! சின்னஇருள்-அடி
வானம் விழுங்கிற்றுக் கீழ்த்திசையில்
சிந்திய பொன்மலர் மீனினம்-பக்கத்தில்
நீஇல்லை என்றாற் சிரிப்பதில்லை!
2


கத்திப் பறந்தது தனிநாரை!-மீண்டும்
காடு திரும்பிற்றுப் பேடையுடன்!
புத்தொளி வந்தது! பக்கத்தில்-நீஇல்லை!
பூத்த நிலாவெறுப் பேற்றுதடி!
3


முல்லை மலர்ந்தது கொல்லையிலே-நாற்றம்
மூலை முடுக்கும் நிரம்பியது!
கல்லிடைப் பாயும் நீள் அருவி-பக்கம்
நீஇல்லை என்றால் கசக்குதடி!
4


வெள்ளி மெருகேறி நீர்நிலைமேல்-தென்னை
மெல்ல அசைந்திடும் தென்றலிலே!
பள்ளத் தவளை மணிக்குரலும்-நீஎன்
பக்கத்தில் இல்லை! வாட்டுதடி!
5


24
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/33&oldid=1179804" இலிருந்து மீள்விக்கப்பட்டது