பக்கம்:இரவு வரவில்லை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16. அவளில்லா வாழ்வு!

எங்கிருந்தோ வந்தாள்; உயிரில், எனதுடலில்
தங்கினாள்; தங்கிற்று நீளின்பம்!-சங்குக்
கழுத்தாள்: கதிர்நிலா கார்மயில்; நெஞ்சை
இழுக்கும் இசைத்தமிழ்த் தேன்!
1


வந்தாள்; அவள்யாரோ? மல்லிகைப்பூங் கொத்து!
சொந்தப் பொருளானாள் தீந்தமிழ்!-இந்த
உலகிற் கவள்வேறு சாதி; எனினும்,
மலர்க்கா டெனக்கவ ளாம்!
2


பூவொத்த கண்கள்; உடலோ குளிர்தென்றல்;
தாவிவரும் கிள்ளைத் தமிழ்ப்பேச்சு!-கோவை
இதழாள்; இரண்டாண்டின் முன்னோர்நாள் வந்தாள்:
புதுப்புனல் ஓடை யவள்!
3


பால்கொடுத்தாள்; என்பால் உயிர்கொடுத்தான அன்பால்
சேல்விழியை, மூங்கில் திருக்கையை,-நூலாம்
தன் இடையை எனக்களித்தாள்; இன்பம் அளித்தாள்
கடைச்சங்கத் தீந்தமிழ்ப் பாட்டு!
4

சாய்ந்தாள் எனதுடல்மேல், சங்கத் தமிழ்ப்பாட்டில்
தோய்ந்த சுவைபோலத் தோய்ந்தாளே!-காய்ந்தநிலா
இல்லா விரிவான்போல் இல்லாத தாகுமே
நல்லாள் அவளில்லா வாழ்வு!
5


29
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/38&oldid=1179837" இலிருந்து மீள்விக்கப்பட்டது