பக்கம்:இரவு வரவில்லை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. கார்த்திகை விளக்கு


மேற்றிசையிற் பிறந்தவந்தக் கொசுவின் கூட்டம்
மெல்லமெல்ல நம்நாட்டின் ஆசை தூண்டக்
காற்றூடே கலந்துவந்து அடிமை யற்றுக்
கண்ணயரும் தமிழ்மக்கள் காதிற் பாடிக்
கூற்றுவன்போல் உடல்கடித்து உதிர முண்ணும்
கொடுமையைத்தான் எத்தனைநாள் பொறுப்பார் மக்கள்?
ஏற்றிவிட்டார் தமிழ்ப்பெண்கள் தங்கள் இல்லம்
எங்கணுமே எண்ணில்லா அறிவுத் தீபம்!
1


கார்த்திகைநல் நாள்மூன்றும் எரியும் அந்தக்
கவரொளியிற் கொசுக்கூட்டம் வீழ்ந்து மாயும்
நேர்த்தியைநான் என்சொல்வேன்? உலகம் ஒன்றாய்
நின்றிடினும் அறிவின்முன் தலைகாட் டாது!
கார்த்திகையின் விளக்குப்போல் நாடு தோறும்
கற்றவர்கள் மிகுந்திடிலோ களிப்பே பொங்கும்;
சீர்த்திமிகும்; சாதிமதச் சிக்கல் நீங்கும்;

செழுமைதங்கும்; சமரொழியச் செய்யுந் தானே!
2

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/53&oldid=1180111" இலிருந்து மீள்விக்கப்பட்டது