பக்கம்:இரவு வரவில்லை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. அதுவே போதும்!


எண்ணுக்கோ விருந்தளிக்கத் தனிமை! நல்ல
எழுத்துக்கோ விருந்தளிக்கத் தென்றற் காற்று!
கண்ணுக்கோ விருந்தளிக்கப் பசுமைக் காடு!
காதுக்கோ விருந்தளிக்கப் புள்ளின் கூட்டம்!
பண்ணுக்கோ விருந்தளிக்க மலையின் சாரற்
பாய்ந்துவரு மெல்லருவி! இணைந்து வாழும்
மண்ணுக்கோ விருந்தளிக்க ஓடி யாடும்
மடச்சிறுவர்! அதுபோதும்! அதுவே போதும்!
1


வான்கொடுக்க மழையுண்டு! மழையைத் தேக்கி
வயல்கொடுக்கக் காலுண்டு! பசிநோய் போக்க,
மீன்கொடுக்க ஆறுண்டு! நன்செய் உண்டு!
மணங்கொடுக்க விரிவண்ணப் பூக்கள் உண்டு!
தேன்கொடுக்க மலையுண்டு! மலையின் பாங்கில்
தினைகொடுக்கப் புனமுண்டு! மக்கட் கென்றும்
நான்கொடுக்க என்வாழ்வாம் உயிரின் மேலாம்
நல்லதமிழ்ப் பாட்டுண்டே! அதுவே போதும்!
2


எள்ளியெள்ளி எனைமாற்றார் பேசி னாலும்,
எனதன்பர் புகழ்ந்தாலும் கவலை யில்லை!
அள்ளியள்ளிக் கொடுத்தாலும், அண்டம் காட்டி
அளிப்பனெனச் சொன்னாலும் அடிமை யில்லை!
உள்ளத்தில் ஊற்றெடுக்கும் எண்ணத் தேக்கம்
ஒளிப்பதில்லை! கட்டின்றி இச்சை போல
வெள்ளத்தை எதிர்த்தேறும் உள்ளம் உண்டே!
தமிழ்ப்பாட்டாம் வேலுண்டே! அதுவே போதும்!
3

49

இ.வ.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/57&oldid=1180028" இலிருந்து மீள்விக்கப்பட்டது