பக்கம்:இரவு வரவில்லை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14. பேசவில்லை!


மாடியிலே நான்படுத்துக் கிடந்தேன்;வேடன்
அடிபட்ட மான்போல வந்தாள்; நின்றாள்!
‘ஏடி!உன்றன் முகம்சோங்கிக் கிடக்கு’ தென்றேன்!
ஏறிட்டுப் பார்க்காமல் அழுது நின்றாள்!
ஆடையினைப் பிடித்திழுத்தேன்; ‘அமர்க’ என்றேன்;
அசையவில்லை ஒருசிறிதும்; எழுந்து நின்று,
‘பாடினேன் பாட்டொன்று குமரிக் காகப்
படித்துப்பார்!’ எனச்சொன்னேன், பேச வில்லை!
1


‘ஊற்றிசைக்கும் பாட்டைப்போல் மக்கள் உள்ளம்
ஊடுருவும் குயிலைப்போல் எனது சொந்த
ஆற்றலினால் தமிழ்பாடி உனது நெஞ்சை
அள்ளுகின்ற பாட்டிசைப்பேன்; கலங்கேல்!என்ன
சீற்றமடி என்மீது ? வாய்தி றந்து
செப்பாயோ?’ எனக்கெஞ்சி நின்றேன்; என்சொல்
காற்றினிலே போனதடா! அந்தோ! என்றன்
கவிப்பெண்ணாள் என்னுயிராள் பேச வில்லை!
2


‘என்னிடத்தைக் கவரவரும் இந்தி தன்னை
உயிர்குடிப்பேன்; எத்தனைபேர் அவளுக் காகத்
தன்மானம் விட்டுவந்து துணைசெய் தாலும்
தவிடுபொடி யாக்கிடுவேன்; அதோபார் நாட்டில்
என்னருமைத் தோழர்களின் அணிவ குப்பை!’
என்றுரைத்தேன்; நானெழுந்தேன் மறவன் போலக்!
கன்னியவள் கடைக்கண்ணாற் சிரித்தாள்! கோவைக்

கனியிதழ்கள் அசைந்தனவே! பேச வில்லை!
3

58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/66&oldid=1180014" இலிருந்து மீள்விக்கப்பட்டது