பக்கம்:இரவு வரவில்லை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

மிழ் மக்களின் வாழ்க்கை அகம், புறம் என்னும் இரு வகையுள் அடங்கும். அதனை விளக்கும் இலக்கியமே ‘இரவு வரவில்லை’ என்பதாகும். அகவிலக்கணத்திற்கு ஓர் இலக்கியமாய் இலங்குகின்றது இதன் முதற் பகுதியான இன்பப்பகுதி. ஏனையவை புறவிலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாய் இலங்குகின்றன.

‘இரவு வரவில்லை’ என்னும் பெயருடன் வெளிவரும் இந்நூல், கவிஞர் வாணிதாசரின் பன்னிரண்டாவது படைப்பாகும். இத்தொகுப்பு நூல் இன்பம், பூக்காடு, கையறு நிலை, பன்மணித் திரள் என்னும் நான்கு பகுதிகளைக் கொண்டு திகழ்கின்றது.

கவிஞர் பழமொழியை எடுத்தாளுந்திறன் தனிப் பேராற்றல் உடையதாகத் தோன்றுகிறது. ‘காட்டிலே வரகு விளைஞ்சாலும் கல்லுரலுக்க ஒரு நாள் வந்துதான் ஆகணும்’ என வழங்கும் பழமொழி கவிஞர் வாக்கில்,

“காட்டோரப் புன்செயிலே வரகுவிளைந் தாலும்
கல்லுரலுக் கென்றேனும் வந்தாக வேண்டும்!”

என உயிர் பெற்று ஒலிக்கின்றது. ‘உனக்கேது காதல்?’ என்ற தலைப்பில், ‘நலங்கிள்ளிப் பையன் (கவிஞர் மகன்) மென்கொம்பு கையேந்தி விளை யாடுவோரை அடித்தடித்துச் சிரித்திருப்பான்’ என இயல்பு நலிற்சியாகக் கூறியுள்ள நயம் படித்துணர்வோக்குப் பேரின்பம் ஊட்டும்.

பழமொழியைப் போலவே கவிஞர் எடுத்தாளும்

உவமைகள் யாவும் எளியனவே ஆகும்.

“நாள்விளக்க வருகின்ற வைகறையைப் போல
நலம்விளக்க வந்தவளே! விடிகாலை வானே!”

என்னும் அடியில் தலைவியின் வருகைக்கு விடியற்காலையை ஒப்பிட்டுக் காட்டும் பேரழகைக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/7&oldid=1180151" இலிருந்து மீள்விக்கப்பட்டது