பக்கம்:இரவு வரவில்லை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vii

‘எங்கிருந்தால் என்ன?’ என்ற தலைப்பில், “நம் காதற்கு எல்லை அகல்வானும் நீள்கடலும் இவ்வுலகும் போதா!” என வரும் அடியானது சங்கத் தமிழையும் (குறுந்தொகை,3) விஞ்சி விளங்குகிறது என்னலாம்.

‘முல்லையும் வண்டும்’ புதிய படைப்பு. ‘விழியோ? அல்ல!’ என்னும் தலைப்பில் அந்தாதித் தொடையாக அமைந்த கவிதை நயங்கள் கண்டு மகிழக் கூடியனவாகும்.

‘நீ இல்லாச் சில நாட்களில்’ சொல்லுக்குச் சொல் உவமை அழகு அமைந்து அழகுக்கு அழகு செயக்காண்கின்றோம்.

‘முடியாதே’ என்னும் தலைப்பில் அமைந்த பாடல்கள் ‘இவரைப்போல் இவ்வளவு எளிமையாகப் பாடல் எவர்க்கும் முடியாதே!’ என்பதையே காட்டுவனவாகும்.

கவிஞர் உள்ளத் துணிவும் அஞ்சாமையும் மிக்குடையவர் என்பதைக் ‘காளையின் கடிதம்’ என்னும் தலைப்பிலுள்ள வெண்பாவின் ஈற்றடிகள் எடுத்துக் காட்டுகின்றன.

‘அவளில்லா வாழ்’வில் உண்மையும் கற்பனையும் உருவும் நிழலும்போல ஒன்றி நிற்பதைக் காணலாம்.

‘கனவு ஒரு கானல்’ என்னும் தலைப்பில் அமைந்த கவிதைகளைப் படித்துக்கொண்டே சென்றால், கவிஞர் நம்மை ஒரு கானலில் விட்டுவிட்டுப் போய்விடுகின்றார். அங்கிருந்து மீளுதல் பெருந்துன்பமாகவே உள்ளது.

‘அதுவே போதும்!’ கவிஞரின் உள்ளக் கிடக்கையை உரணக் கிடைத்த அரிய கவிதைக் கருவூலமாகும்.

“எள்ளியெள்ளி எனைமாற்றார் பேசி எனும்
எனதன்பர் புகழ்ந்தாலும் கவலை யில்லை!”

இவ்வடி கவிஞரின் பற்றற்ற தன்மைக்கு எடுத்துக்காட்டாய் இலங்குகின்றது.

‘காணி நிலம் வேண்டும்’ என்றான் ஒரு கவிஞன். ‘குணத் தாலும் உடலாலும் அழகு மிக்க குமரி எனை மணந்து இன்பம் கொடுக்க வேண்டும்’ என்றான் மற்றொரு கவிஞன். “மக்கட்கு என்றும் நான் கொடுக்க என் வாழ்வாம் உயிரின் மேலாம் நல்ல தமிழ்ப் பாட்டுண்டே! அதுவே போதும்!” என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/8&oldid=1180153" இலிருந்து மீள்விக்கப்பட்டது