பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விண்வெளியில் மனிதன்

101

பெயர் கொண்ட விண் வெளிக் கூட்டில் பிரயாணம் செய்து 22 முறை பூமியைச் சுற்றி 600,000 மைல் பிரயாணம் செய்து வெற்றியுடன் திரும்பினார். இப் பிரயாணம் 34 மணி 16 நிமிடங்கள் நடைபெற்றது. இதுதான் அமெரிக்கர்களின் மிகப் பெரிய சாதனையாகும். ஆனால், சென்ற ஆகஸ்டில் (1962) கர்னல் பாப்போவிச் என்ற இரஷ்ய விண்வெளி வீரர் 48 தடவைகள் பூமியைச் சுற்றி வந்தது ஈண்டு நினைவு கொள்ளத்தக்கது.

கூப்பர் விண்வெளிக் கூட்டில் ஏழரை மணி நேரம் தூங்கி எழுந்ததும் தாம் சுகமாக இருப்பதாக வானொலி மூலம் அறிவித்தார். ஏழாவது தடவை பூமியைச் சுற்றும் போது நான்கு நிமிடங்களில் சீனாவின் மேற்குக் கரையிலிருந்து தெற்கு எல்லையிலுள்ள ஷாங்காயைக் கடந்தார். கூப்பர் விண்வெளியில் தமது முதல் உணவாக இறைச்சி, வெண்ணெய், ரொட்டி, கேக், பழம், பட்டாணி, ஆரஞ்சு, திராட்சைச் சாறு ஆகியவைகளை அருந்தினார்.

இதுகாறும் அமெரிக்க விண்வெளி வீரர்கட்கு ஏற்படாத ஒரு கடுஞ்சோதனை இவருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. பதினெட்டாவது சுற்று முடிந்ததும் விண்வெளிக் கூண்டினை இறங்கவைக்கும் நுட்ப மின்சாரக் கருவிகள் சரியாகச் செயற்படவில்லை என்பதைக் காட்டும் அபாயக்குறி விளக்குகள் எரியத் தொடங்கின. இன்னும் நான்கு சுற்றுக்கள் நிறைவு பெற வேண்டும். தமது கூண்டில் நேரிட்ட இயந்திரக் கோளாறினை உடனே கூப்பர் வானொலி மூலம் அறிவித்தார். அந்தக் கருவிகளைச் சரிப்படுத்தக் கூப்பர், தாமாக மேற்கொண்ட முயற்சிகள் பயனற்றுப் போயின. இறுதிச் சுற்றும் நெருங்கி விட்டது.