பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விண்வெளியில் மனிதன்

103

இடத்திற்கு வந்ததும் எதிர் - இராக்கெட்டுகளை (Retro-rockets) இயக்கிவிட்டார் கூப்பர். இந்த இராக்கெட்டுகளின் வால்பகுதியின் வழியாகக் கூண்டு செல்லும் எதிர்த்திசையில் பீச்சும் சுவாலையால் கூண்டின் வேகம் தணிக்கப்பெறும். வேறெந்தவகையிலும் விண்வெளியில் கூண்டினைத் தடுத்து நிறுத்த முடியாது. எதிர் இராக்கெட்டுகள் இயங்க இயங்க, கூண்டின் வேகம் குறைந்து கொண்டே வந்து அதன் அயனப்பாதையும் பூமியை நெருங்கத்தொடங்கியது. வேறு சில கருவிகளால் சரியான திசையில் கூண்டினைத் திருப்பி அது பூமியின் அருகில் நெருங்கியதும் ஓர் ஆரஞ்சு நிறக் குதிகொடையை (Parachute) விரித்து விட்டார் கூப்பர். பசிபிக் மாபெருங் கடலில் அறுதியிடப் பெற்ற இடத்தில் கூண்டும் வந்து இறங்கியது. அக்குதிகொடை 3,000 அடி உயரத்திலிருந்தபோது அதனைக் ‘கியர்சார்ஜ்’ (Kearsarge) என்ற மீட்பு விமானத்திலிருந்தவர்கள் காண முடிந்தது. இயந்திரக் கோளாறு ஏற்படாமலிருந்தால் கூண்டு கப்பலில் பொருத்தப்பெற்றிருந்த ஒரு பிரத்தியேகமான வலையில் வந்து இறங்கியிருக்கும்.

இன்று இரஷ்யாவும் அமெரிக்காவும் விண்வெளி ஆராய்ச்சியில் அதிகமாக ஈடுபட்டுள்ளன; மாறி மாறிப் பல சோதனைகள் நிகழ்த்தியும் வருகின்றன. எதிர்காலத்தில் என்னென்ன வியப்பான நிகழ்ச்சிகள் ஏற்படப் போகின்றன என்பதை யார்தாம் முற்கூறவல்லார்? பிழைத்திருந்தால் நாமும், நம்பின்னே வரும் வழித்தோன்றல்களும் இவற்றைக் கண்டு அனுபவிக்கப் போகின்றோம். அவர்கள் சந்திரன் செவ்வாய் போன்ற கோள்கட்கும் பயணத்தை மேற்கொள்ளுதல் கூடும்.